செல்லமாக வளர்த்த ஒரே மகனால் உயிரை மாய்த்த பெற்றோர் – கோவையில் பரபரப்பு..!


கோவை பேரூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). இவரது மனைவி நாச்சம்மாள் (68) இவர்களுக்கு கார்த்திக் என்ற ஒரே மகன் உள்ளார்.

இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 6 மாதத்திற்கு முன் கார்த்திக்கிற்கும் அவரது மனைவி ஜெயப்பிரதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த ஜெயப்பிரதா தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வெளியேறி விட்டார். அவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து கார்த்திக் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கும் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார்.

இதனால் கார்த்திக்கின் தந்தை சுப்பிரமணி, தாய் நாச்சம்மாள் ஆகியோர் வேதனையில் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் சுப்பிரமணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு மனைவி நாச்சம்மாள் ஓடி வந்தார்.

அவர் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். ஆனால் சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி சுப்பிரமணி மயங்கி விழுந்து இறந்தார்.

அவர் இறந்த சற்று நேரத்தில் நாச்சம்மாளும் சுருண்டு விழுந்து இறந்தார். இதனை பார்த்த கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். அவர் பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜாஸ் வில்லியம் சிங் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கணவன்-மனைவி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் கூறினார்கள். கார்த்திக் வேலைக்கு செல்லாமல் இருந்தது அவரது பெற்றோருக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் தனது விருப்பப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தது அவர்களது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. செல்லமாக வளர்த்த ஒரே மகன் இப்படி இருக்கிறானே என்ற வேதனையில் கணவன்-மனைவி தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!