விவசாயி விஷம் குடித்து தற்கொலை.. வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியானதால் பரபரப்பு..!


கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள பழமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தங்கராசு (வயது 32). விவசாயி. மாரிமுத்துவின் அண்ணன் கருப்பண்ணன், அவரது மகன் பொன்னுசாமி. இவரது மனைவி கண்ணம்மாள். இந்தநிலையில் நிலம் தொடர்பாக மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கும், கருப்பண்ணன் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் தங்கராசுவிடம், கருப்பண்ணன், பொன்னுசாமி, கண்ணம்மாள் ஆகியோர் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த தங்கராசு நேற்று முன்தினம் மாலை புன்னம்சத்திரம் பழமாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போன் வாட்ஸ்-அப்பில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதனால் பதற்றம் அடைந்த நண்பர்கள் பழமாபுரம் காட்டுப் பகுதியில் தங்கராசுவை தேடினர். அங்கு அவர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் கருப்பண்ணன், பொன்னுசாமி அவரது மனைவி கண்ணம்மாள் ஆகிய 3 பேர் மீதும் தங்கராசுவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தங்கராசுவின் உறவினர்கள் ஏராளமானவர்கள் நேற்று வந்தனர். பின்னர் தங்கராசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவை சுற்றி உள்ள 4 சாலைகளிலும் தங்கராசுவின் உறவினர்கள் அமர்ந்து மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தங்கராசுவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தங்கராசுவை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட தங்கராசுவிற்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், இளம்தமிழன், பாலமித்ரன் என்ற மகன்களும் உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!