காதலியை உருட்டுக்கட்டையால் துடிதுடிக்க அடித்து கொன்ற காதலன்..!


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் மகள் மகாலட்சுமி (வயது 30), பட்டதாரி. அதே ஊரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மோகன் (36).

மகாலட்சுமிக்கும், மோகனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து இருவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய இருந்தனர். இதனிடையே மோகனும், மகாலட்சுமியும் அவ்வப்போது சந்தித்து தங்களது திருமணம் பற்றி பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி வீட்டிற்கு வந்த மோகன், அவரை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தைலமரக்காட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் நீண்ட நேரமாக பேசி கொண்டிருந்தனர். மகாலட்சுமி வீடு திரும்பாததால் அவரை அவரது பெற்றோர் அழைக்க சென்றனர்.

அங்கு சென்று பார்த்த போது மகாலட்சுமி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மோகனும் உடலில் காயத்துடன் கீழே சாய்ந்து கிடந்தார். இதனைப்பார்த்த மகாலட்சுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். மேலும் இது பற்றி கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மகாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகனும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து மகாலட்சுமியை கொலை செய்து விட்டு, மோகனை தாக்கி விட்டு சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே மோகன் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவே, மோகனே மகாலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் மற்றும் மகாலட்சுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் தொடர்பாக மகாலட்சுமிக்கும், மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், நேற்றிரவு தைலமரக்காட்டில் நின்று பேசும் போது இருவருக்கும் மீண்டும் பிரச்சனை உருவாகவே, ஆத்திரமடைந்த மோகன், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மகாலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அவரது காது மற்றும் பின்புற தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த மோகன், கொலையை மறைக்கவும், போலீசாரிடமிருந்து தப்பிக்கவும் நாடகமாட முடிவு செய்தார். அதன்படி மர்மநபர்கள் தன்னை தாக்கி, மகாலட்சுமியை கொலை செய்தது போல நம்ப வைக்க, அவரே உருட்டுக் கட்டையால் தன்னைத்தானே தாக்கி லேசான காயத்தை ஏற்படுத்திக் கொண்டு நாடகமாடியதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் விசாரணையில் அவர் சிக்சிக்கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கொன்று காதலன் நாடகமாடிய சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!