சொத்து தகராறில் தங்கை- கணவரை ஓடஓட வெட்டி படுகொலை செய்த அண்ணன்..!


நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 48).

இவர் தோவாளை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி (40). காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு ஆர்த்தி என்ற லெட்சுமி (16) என்ற மகள் உள்ளார். அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் லெட்சுமி 10-வது வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலையில் மணிகண்டன் வழக்கம்போல பூ வியாபாரத்திற்கு சென்று விட்டார். இரவு 10.15 மணியளவில் மணிகண்டன் தனது வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு அவரும், அவரது மனைவி, மகளும் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதனால் கல்யாணி சென்று கதவை திறந்தார். வெளியில் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் கும்பல் அவரை தள்ளி விட்டப்படி வீட்டுக்குள் புகுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணி பயத்தில் உறைந்து போனார். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சற்றும் தாமதிக்காமல் கல்யாணியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவரது கழுத்து மற்றும் உடல் முழுவதும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறிய படி கல்யாணி கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிரும் பிரிந்தது.

கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் மணிகண்டன், மகள் லெட்சுமி ஆகியோர் அங்கு ஓடி வந்தனர். அவர்களையும் அந்த 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் மணிகண்டனுக்கு தலை, முதுகு, கை போன்ற இடங்களில் பலமான வெட்டு விழுந்தது. லெட்சுமிக்கு கையில் படுகாயம் ஏற்பட்டது. அரிவாள் வெட்டப்பட்ட தந்தையும், மகளும் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் துடித்துக் கொண்டிருந்தனர்.

கொலை வெறியாட்டம் ஆடிய அந்த கும்பல் தாங்கள் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இதற்கிடையில் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனும், லெட்சுமியும் தங்களை காப்பாற்றும்படி அலறினார்கள். அவர்களது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோதுதான் பூ வியாபாரி மணிகண்டன் வீட்டிற்குள் நடந்த பயங்கர சம்பவம் பற்றி தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனையும், லெட்சுமியையும் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் மணிகண்டன் பரிதாபமாக இறந்து விட்டார். லெட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது கண் முன்பே தாயும், தந்தையும் கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்ட காட்சியை பார்த்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீள முடியவில்லை.

கணவன்-மனைவி வெட்டிக்கொல்லப்பட்டது பற்றி ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சொத்து தகராறு காரணமாக இந்த கொலையை கல்யாணியின் அண்ணன் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர் தோவாளை பாலாஜி நகரில் வசித்து வருகிறார்.


கல்யாணியின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். இவர்களில் 4 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள். இதில் ஒரு சகோதரி இறந்து விட்டார். கல்யாணி குடும்பத்தினருக்கு பூர்வீக சொத்து 4½ ஏக்கர் தோவாளையில் உள்ளது. இந்த பகுதியில் 4 வழிச்சாலை வந்துள்ளதால் இந்த சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி. உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த புகார் தொடர்பாக சுடலையாண்டியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கல்யாணியையும் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது கடந்த 30-ந்தேதிக்குள் கல்யாணிக்கும் மற்றொரு சகோதரி குடும்பத்துக்கும் தான் பணம் கொடுத்து விடுவதாக சுடலையாண்டி கூறி உள்ளார்.

இந்த விசாரணையின்போது, கல்யாணி சாட்சி கையெழுத்தும் போட்டுள்ளார். இதனால் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி கல்யாணி சென்று பணத்தை கொடுக்குமாறும், தனக்கும் சொத்தில் உள்ள பங்கை தருமாறும் கேட்டு வந்தார். ஆனால் அவர் 30-ந்தேதி பணத்தை கொடுக்கவில்லை. மேலும் ஒருநாள் அவகாசம் கேட்டுள்ளார். அதன் பிறகும் பணத்தை கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் சொத்து தகராறு காரணமாக நேற்றிரவு சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கல்யாணி மற்றும் அவரது கணவர் மணிகண்டனை தீர்த்துக்கட்டி உள்ளார். தலைமறைவாக உள்ள சுடலையாண்டியையும் 4 பேர் கூலிப்படையையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த இரட்டை கொலை வழக்கு குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!