`கையில பணமுமில்லை,சம்பளமும் வரல!’ – மண் குடிசையில் வாழ்ந்த எம்.எல்.ஏ-வுக்கு வீடு கட்டிக்கொடுத்த மக்கள்!

கோடிகளில் புரளும் எம்.எல்.ஏ-க்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவருக்கு மக்களே சேர்ந்து வீடு கட்டிக்கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

அரசியல்வாதிகள் என்றாலே கோடிகளில் புரள்பவர்கள், சொகுசு காரில் வலம் வருபவர்கள், வசதியான வாழ்க்கை வாழ்பவர்களாக இந்தியாவில் அறியப்படுகிறார்கள். சிலர் இதில் விதி விலக்காக வாழ்ந்து வருகிறார்கள் என்றாலும், பஞ்சாயத்து தலைவர் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை எல்லாரும் வசதியான வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில், ஏழ்மையில் தவித்த மத்திய பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவருக்கு, பொதுமக்களே சேர்ந்து வீடு கட்டிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் விஜய்ப்பூர் தொகுதி எம்.எல்.ஏ சீதாராம். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர். ஏற்கெனவே இரண்டு முறை பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், தீவிர விசுவாசி என்பதாலும், அந்தப் பகுதி மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர் என்பதாலும் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவருக்குக் கட்சி தலைமை மீண்டும் சீட் கொடுத்தது. ஆனால், இந்த முறை வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரைவிட அதிக அளவு வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ-வானார். எம்.எல்.ஏ ஆன பின்பும் தனது மண் குடிசை வீட்டிலேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

எம்.எல்.ஏ ஆன பிறகாவது வேறு வீட்டில் குடியிருக்கலாமே எனப் பலர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தன்னிடம் அதற்கான பணம் இல்லை என்பதால் அவர்களின் கோரிக்கையை மறுத்து வந்துள்ளார் சீதாராம். இந்த விஷயம் வெளியில் தெரிய அந்தப் பகுதி கிராம மக்கள், கட்சி நிர்வாகிகள், அவரின் ஆதரவாளர்கள் எனப் பலரும் பணம் வசூலித்து சீதாராமுக்கு புதிதாக வீடு கட்ட உதவி புரிந்துள்ளனர். எம்.எல்.ஏ சீதாராமுக்கு இந்த மாதம்தான் முதல்மாத ஊதியம் வரவுள்ளது. ரூ.1.10 லட்சம் வரவுள்ள தனது சம்பளத்தைத் தொகுதி மக்களுக்குச் செலவு செய்வதாக ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அந்தப் பணத்தை வேண்டாம் எனக் கூறியுள்ள அந்தப் பகுதி மக்கள், அதையும் வீடு கட்ட வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் புதிய வீடு கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளார் சீதாராம்.

இவ்வளவு எளிமையாக உள்ள சீதாராம், தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்த சொத்து விவரங்கள் என்ன தெரியுமா. வேட்புமனு தாக்கல் மனுவில், “மொத்தம் ரூ.46,000-மும், அதில் ரூ.25,000 ரொக்கமாகக் கையிலும், மீதித் தொகை வங்கியிலும் உள்ளதாகவும், 600 சதுர அடியில் குடிசை வீடும், இரண்டு ஏக்கர் நிலமும்’’ உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் உதவி செய்துள்ளது குறித்துப் பேசிய எம்.எல்.ஏ சீதாராம், “சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு என் கையில் பணம் இல்லை. முதல் மாதச் சம்பளமும் இன்னும் வரவில்லை. என் நிலைமையை அறிந்து மக்கள் அனைவரும் எனக்கு வீடு கட்ட உதவியுள்ளனர். இப்போது மட்டும் உதவவில்லை. நான் தேர்தலில் வெற்றிபெற்றபோதே, என் எடைக்கு நிகராக காசுகளை அன்பளிப்புச் செய்தனர். அந்தப் பணத்தை வைத்துதான் அப்போது என் குடிசையைப் பராமரித்தேன். இப்போதும் என் முதல் மாத சம்பளத்தை வேண்டாம் என மக்கள் கூறியுள்ளனர்” என நெகிழ்ந்து கூறினார்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.