மன உளைச்சலால் பறிபோன 51 உயிர்கள்!- நேபாள விமான விபத்தின் பின்னணி

கடந்த வருடம் மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் விமானம் நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்த வேகத்தில் பற்றி எரியத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த 71 பயணிகளில் 51 பேர் உயிரிழந்தனர்.

விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அதில் உள்ள அனைத்து இயந்திரங்களும் தீக்கிரையானது. இதனால் விமான விபத்தின் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர். தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு விமானம் எப்படி விபத்தைச் சந்தித்தது என்ற இறுதித் தகவலை வெளியிட்டுள்ளனர் நேபாளத்தின் விசாரணைத் துறை அதிகாரிகள்.

அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், ‘விமானம் புறப்படுவதற்கு முன்பில் இருந்தே விமானி மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் அவருக்குத் தூக்கமின்மையும் இருந்துள்ளது. இதற்கு நடுவில்தான் அவர் அன்று விமானத்தை இயக்கியுள்ளார். மன உளைச்சலின் காரணமாக விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (cockpit ) அவர் புகை பிடித்துள்ளார். இது காக்பிட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் தெரியவந்தது.

மேலும், விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் உயரம் மற்றும் ஏனைய விவரங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால் நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும்போது மேற்கு திசையில் பலமாகக் காற்று வீசியுள்ளது. அப்போது தெற்கு திசையில் விமானம் தரையிறங்கியதால் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானியின் அலட்சியம் மற்றும் சக ஊழியர்களின் கவனக் குறைவே நேபாள விமான விபத்துக்குக் காரணம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.