விஷம் குடித்து தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி வழக்கில் திடீர் திருப்பம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 36). இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி தமிழரசி(35). இந்த தம்பதிக்கு நிவேதா(17), சுவேதா(14), பிருந்தா(10) ஆகிய 3 மகள்களும், கவுதம்(7) என்ற மகனும் உள்ளனர். முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலுக்கு சென்றபோது ராஜேந்திரனுக்கும், தமிழரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது பற்றி அறிந்ததும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள் கண்டித்தனர்.

இவர்களது எதிர்ப்பையும் மீறி ராஜேந்திரன், தமிழரசி ஆகிய 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் இருவரும் வேலைக்கு சென்று, குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனிடையே ராஜேந்திரனும், தமிழரசியும் கோவில்பாளையத்தில் வசித்து வந்தது தெரிந்ததும், அன்பழகனின் தம்பியான பரசுராமன்(38) கடந்த 24-ந் தேதி காரில் அங்கு சென்றார். பின்னர் தமிழரசியை மட்டும் அவர் மேல்மேட்டுக்குப்பத்துக்கு அழைத்து வந்தார். தமிழரசிக்கு உறவினர்கள் அறிவுரை கூறினர். இதற்கிடையே வீட்டின் பின்பக்கத்தில் உள்ள முந்திரி தோட்டத்தில் வாயில் நுரை தள்ளியபடி தமிழரசி பிணமாக கிடந்தார். அருகில் விஷபாட்டிலும் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, தமிழரசியின் உடலை கைப்பற்றினர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தமிழரசி இறந்தது பற்றி தகவல் அறிந்ததும் ராஜேந்திரனும், மேல்மேட்டுக்குப்பத்திற்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழரசியின் மூத்த மகள் நிவேதா, காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது தாய், சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உறவினர்கள் சிலர் அவரை தாக்கியதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் மேல்மேட்டுக்குப்பத்துக்கு சென்று, தமிழரசியின் கொழுந்தன் பரசுராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், அண்ணன் அன்பழகனுடன் சேர்ந்து தமிழரசியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பரசுராமனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான், முந்திரி கொட்டை உடைக்கும் தொழில் செய்து வருகிறேன். எனது அண்ணனுக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. ஆனால் எனது அண்ணி தமிழரசியின் நடத்தை சரியில்லை. ராஜேந்திரனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதை கண்டித்தும், அவர் கேட்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேந்திரனும், தமிழரசியும் திடீரென மாயமானார்கள். பல இடங்களில் தேடிப்பார்த்தும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி கிராம மக்கள் பேசியதை கேட்டு, அவமானமாக இருந்தது.

இதனிடைய கடந்த 2 மாதத்துக்கு முன்பு அண்ணனின் 2-வது மகள் சுவேதா திடீரென மாயமானார். அதன் பிறகு சமீபத்தில் சுவேதா, செல்போனில் தொடர்பு கொண்டு, தமிழரசியுடன் இருப்பதாக கூறி முகவரியையும் தெரிவித்தார்.

இதை கேட்டதும் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அங்கிருந்தால் சுவேதாவும் கெட்டுவிடுவார் என்று எண்ணினேன். எனவே சுவேதாவை அழைத்து வருவதற்காக ஒரு காரில் கோவில்பாளையத்துக்கு சென்றேன். அங்குள்ள ஒரு நூற்பாலையில் சுவேதா வேலைக்கு சென்றிருந்தார். உடனே நான், அந்த நிறுவனத்திற்கு சென்று சுவேதாவை அழைத்துச்செல்வது பற்றி பேசினேன். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், சுவேதா 3 ஆண்டுகள் இங்கேதான் பணியாற்ற வேண்டும் என்றனர்.

எனவே அவரை அழைத்து வரமுடியவில்லை. பின்னர் தமிழரசியிடம், இனியாவது திருந்தி குழந்தைகளுடன் வாழுங்கள் என்று அறிவுரை கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே தமிழரசியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, சொந்த ஊருக்கு அழைத்து வந்தேன்.

வீட்டில் நானும், அன்பழகனும் தமிழரசியிடம் அறிவுரை கூறினோம். ஆனால் அவர், அதை கேட்காமல் ராஜேந்திரனுடன் வாழப்போவதாக கூறினார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே நானும், எனது அண்ணனும் தமிழரசியை தூக்கிக்கொண்டு, வீட்டின் பின்புறத்தில் உள்ள முந்திரி தோப்பிற்கு சென்றோம். அப்போது நான், அவரை அடித்து உதைத்தேன். மேலும் நான், ஏற்கனவே வைத்திருந்த விஷபாட்டிலை தமிழரசியிடம் கொடுத்து, இதை குடித்து தற்கொலை செய்து கொள் என்றேன். ஆனால் அவர், அதை குடிக்காமல் ராஜேந்திரனுடன் சேர்ந்து வாழப்போவதாக கூறினார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

உடனே தமிழரசியின் கை, கால்களை அன்பழகன் பிடித்துக்கொண்டார். நான் அவரது வாயில் விஷம் ஊற்றினேன். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். மறுநாள், தமிழரசி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். ஆனால் நிவேதா போலீசில் புகார் கூறியதால் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தலைமறைவான அன்பழகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.