விடுதி வார்டனின் பிரியாணி ஆசையால் அநியாயமாக பறி போனது மாணவனின் உயிர்..!


விடுதி வார்டனுக்கு பிரியாணி வாங்கச் சென்ற 11 வகுப்பு மாணவன் மீது டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வருகிறது சென் ஜோசப் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இங்கு ஹாஸ்டல் உள்ளது. கிராமப்புற மாணவ மாணவியர்கள் ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கின்றனர். அதன்படி நேற்று ஹாஸ்டலில் மெடிக்கல் கேம்ப் நடத்தப்பட்டுள்ளது.

மெடிக்கல் கேம்ப் முடிந்ததும் டாக்டர் மற்றும் நர்ஸ்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆஸ்டல் வார்டன்கள் லூர்து மற்றும் எலியாஸ் ஆகியோர், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் 11 வகுப்பு என்ற மாணவனிடம் டூ வீலரை கொடுத்து பிரியாணி வாங்கி வரச்சொல்லி 5 கி.மீ தொலைவில் உள்ள ஜமுனாமரத்தூருக்கு அனுப்பி உள்ளனர்.

மஞ்சுநாத் பிரியாணி வாங்க டூ வீலரில் சென்றபோது பின்புறம் டிராக்டர் மோதியதால் படுகாயமடைந்த மஞ்சுநாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே பலியானார். சம்பவம் அறிந்து விரைந்த ஜமுனாமரத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மஞ்சுநாத்தின் அப்பா ரங்கநாதன் கூறுகையில், `11 வகுப்பு படிக்கும் என் மகன் மைனர் என்று தெரிந்திருந்தும், அவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் அவனிடம் டூவீலரை கொடுத்து பிரியாணி வாங்க அனுப்பியுள்ளனர் ஹாஸ்டலில் உள்ளவர்கள்.

ஹாஸ்டலுக்குப் படிக்க அனுப்பிய என் மகனை என் அனுமதியின்றி வெளியே அனுப்பியுள்ளனர். மலைப்பகுதியில் டூவீலரை ஓட்டுவானா ஓட்டமாட்டான எனற சிந்தனை கூட இல்லாமல் இவர்கள் செய்த காரியத்தால் என் மகனின் உயிர் போய்விட்டது.

யாரைக் கேட்டு என் மகனை ஹாஸ்டலுக்கு வெளியே அனுப்பினீர்கள் என்று கேட்கச் சென்றால் அங்கு உள்ளவர்கள் எந்த ஒரு பதிலையும் கூறாமல் எதுவுமே நடக்காதது போல் கண்டுக்காமல் செல்கிறனர். போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என் மகன் இறப்பிற்கு நியாயம் வேண்டும்.

வார்டன்கள் பிரியாணி சாப்பிடுவதற்கு என் மகன் உயிர் போவது எந்த வகையில் நியாயம். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கதறினார்.

விதிமுறைகளைக் கற்றுத்தரக்கூடிய ஆசிரியர்களே விதியை மீறுவது வேதனையளிக்கிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!