மெரினா கூட்டத்தில் மனைவிகளை தொலைத்த கில்லாடி கணவன்கள்!


சென்னையில் ஆண்டு தோறும் காணும் பொங்கலை கொண்டாட மெரினாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவர். இந்த கூட்டத்தில் சிறுவர் சிறுமியர் மாயமாவது வழக்கம். மாயமாகும் சிறுவர் சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் வருடா வருடம் ஒரு முறையை கையாள்வார்கள். அதாவது இந்த முறை சிறுவர், சிறுமியர் கைகளில் ஒரு பட்டையை அணிவித்து அதில் அவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணை குறிப்பிட்டு அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து நின்று அழும் போது அருகில் உள்ள போலீசாரோ அல்லது பொதுமக்களோ கை பட்டையில் உள்ள செல்போன் எண்ணை அழைத்து குழந்தையை ஒப்படைக்க முடியும். இப்படி குழந்தைகள் மாயமானால் கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆனால் குழந்தைகள் மாயமானதை விட தங்கள் கணவன்கள் மாயமாகிவிட்டதாக போலீசாரை நாடி அழுது புலம்பியுள்ளனர் மனைவிமார்கள்.

மெரினாவில் ஆங்காங்கே போலீசார் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அடுத்தடுத்து ஏழு பெண்கள் வந்தனர். வந்த அனைவருமே கூட்டத்தில் தங்கள் கணவன் தங்களை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டதாக புலம்பி அழுதனர். மேலும் தங்களிடம் கையில் காசு இல்லை என்றும் எப்படி வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் அழுதுபுலம்பியுள்ளனர்.

மாயமான கணவன் மார்கள் செல்போன் எண்ணுக்கு போலீசார் அழைத்த போது அவர்கள் எடுக்கவில்லை. கூட்ட நெரிசலில் அவர்களால் செல்போனை எடுத்தாலும் சரியாக பேசி பதில் சொல்ல முடியவில்லை. இதனை அடுத்து போலீசார் மைக்குகளில் கணவன்களின் பெயர்களையும் மனைவிகளையும் பெயர்களையும் கூறி அழைக்க ஆரம்பித்தனர். இன்னாருடைய மனைவி இங்கு நின்று கொண்டிருக்கிறார் என்று போலீசார் மைக்குகள் மூலம் அறிவித்தனர்.

இதனை அடுத்து ஒவ்வொரு கணவன்களாக வந்து தங்கள் மனைவிகளை அழைத்துக் கொண்டு சென்றனர். மேலும் போலீசார் அந்த கணவன்களுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர். சிலரோ சில மணி நேரம் கூட எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, போலீசார் மைக்கில் அழைத்து எங்கள் மானத்தை வாங்கிவிட்டனர் என்று புலம்பியபடியே சென்றனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!