தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனையில் திருமணம்: ஆந்திராவில் விநோதம்

தற்கொலை செய்துகொள்ள முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திரா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்ட வினோத நிகழ்வு நடந்துள்ளது.

இதுகுறித்து விவரம் வருமாறு:

ஆந்திரா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா (19), நவாஸ் (21) இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட சில சிக்கல்களினால் தாங்கள் பிரிந்துவிடுவோமோ என்று பயந்தனர். ரேஷ்மாவின் பெற்றோர்கள் அவருக்கு திடீரென திருமணம் செய்துவைக்கவேண்டுமென முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் வரன் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ரேஷ்மா தனது அன்பு காதலரை இனி மறந்துவிடவேண்டியதுதான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதை உணர்ந்தார். இதனால் வேதனையடைந்த ரேஷ்மா வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் விக்ராபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரேஷ்மா தற்கொலைக்கு முயன்ற செய்தி அறிந்த நவாஸ் (21) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனைக்கு சென்று இவரும் அதே போன்றதொரு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

நவாஸ் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனை ஊழியர்களே அவர்களை அனுமதித்து உடனடி சிகிச்சை மேற்கொண்டனர். இச்சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே, இவ்விரு ஜோடிகளின் குடும்பத்தினரும் அங்கு கூடி பேசியதாக தெரிகிறது.

இனி இவர்களை பிரிப்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றறிந்த இவ்விரு குடும்பத்தினரும் க்வாஸி எனப்படும் திருமணம் செய்துவைக்கும் மத குருமாரை மருத்துவமனைக்கே வரவழைத்தனர். இதனையடுத்து மருத்துவமனையிலேயே சாவில் இணைய விரும்பிய இக்காதலர்கள் வாழ்க்கையில் இணைந்து உயிர்போராட்டத்தில் சிகிச்சை பெறவந்த மருத்துவமனையிலேயே திருமணத் தம்பதிகளானார்கள்.

இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய கிராஃபோர்டு மிஷன் மருத்துவமனையின் டாக்டர் பி.அவிநாஷ் தெரிவிக்கையில்,

ரேஷ்மாவும் நவாஸும் பூச்சிக்கொல்லி மது அருந்தி உயிருக்குப் போராடும் நிலையில் ஜனவரி 8 -ம் தேதி அன்று விக்ராபாத் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரேஷ்மாவின் நிலை சந்தேகமாக இருந்தது. நவாஸ் உயிர் பிழைத்த நிலையிலும் அவருக்கும் சிகிச்சை தொடர்ந்தது. இருவருக்கும் இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. நல்லவேளையாக இருவரும் ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டனர். ஜனவர் 10 அன்று மாலை குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவ்வாறு டாக்டர் பி. அவிநாஷ் தெரிவித்தார். – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.