9 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த போலி மருத்துவப் பல்கலைக்கழகம் சிக்கியது எப்படி..?


நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவ துறைகளின் கீழ் சான்றிதழ்கள் அளித்துள்ளார்.

இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்தும் இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பல்கலைக்கழகம் குறித்து சந்தேகம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து குத்தாலம் மேலசெட்டித்தெருவில் ஒரு வீட்டில் செயல்பட்ட அந்த பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் வந்தனர்.


சென்னையில் உள்ள மருத்துவ விழிப்புணர்வு பணி துணை போலீஸ் சூப்பிரண்டு தாமஸ்பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் திறந்தவெளி மாற்றுமுறை பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த பல்கலைக்கழகம் போலியாக செயல்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்த போலி சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி முன்னிலையில் மருத்துவ அதிகாரிகள் போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-

இந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம், மாற்றுமுறை மருத்துவம் என்பதை பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை பெற்று மருத்துவம் பார்த்து வருவதாக தெரிகிறது. இதில் அதிகமாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், சென்னை, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அவர்களது விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பி போலி டாக்டர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!