அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்திலிருந்து மனைவி, குழந்தைகளைக் காப்பாற்றிய வீரத் தந்தை..!


இலங்கையில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய தன் குடும்பத்தினரைக் காப்பாற்ற ஒரு தந்தை படும் பாடு வீடியோவாக வெளியாகி, அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளது.

இலங்கை கண்டியில் உள்ள யாதினுவாரா வீதியா என்ற பகுதியில் உள்ள மூன்று அடுக்குகள் கொண்ட குடியிருப்பில்தான் தீவிபத்து நிகழ்ந்துள்ளது. அந்த குடியிருப்பின் கீழ் பகுதியில் கடைகள் உள்ளன. இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களில், குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி காலை மூன்றாவது தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திலிருந்து தன் குடும்பத்தினரைக் காப்பாற்ற, கமநாதன் ராமராஜ் என்பர் தனி ஒருவராக நின்று போராடி வெற்றிபெற்றுள்ளார்.

இதுகுறித்து ராமராஜ் பேசும்போது, “ என் மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் அந்தக் குடியிருப்பில் வசித்துவருகிறேன். நேற்று முன் தினம் காலை, மகன்களை பள்ளிக்கு அனுப்ப நாங்கள் தயாராகினோம். அப்போது, எதிர்பாராதவிதமாக எங்கள் வீட்டுக்கு அருகில் தீ பற்றி எரிந்தது. முதலில், அது எங்களுக்குத் தெரியவில்லை. தீ முழுவதுமாக பரவத்தொடங்கும்போதுதான் தெரிந்தது. பிறகு, உடனடியாக என் குடும்பத்தினருடன் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கிச் செல்ல முடிவுசெய்து, அனைவரும் சென்றோம். ஆனால், படிகள் முழுவதும் தீ பரவியிருந்தது.

நாங்கள் வீட்டினுள் நன்றாக சிக்கிக்கொண்டோம். என்ன செய்வதென்று தெரியாமல் நீண்ட நேரமாக நான் திண்டாடினேன். பிறகு, வீட்டின் ஜன்னல் வழியாக, கீழே நின்றிருந்த பொதுமக்களின் உதவியைக் கோரினேன். வீட்டில் இருந்த பெட் சீட்டுகள் மற்றும் பெட் போன்றவற்றை முதலில் ஜன்னல் வழியாகக் கீழே தூக்கி வீசினேன். மக்கள் அதை வலை போல நன்றாக விரித்துப் பிடித்தனர். பின்னர், என்னுடைய மகன்களை ஒருவர் பின் ஒருவராகப் போர்வையில் தூக்கி வீசினேன். பயமாக உள்ளதாக என் குழந்தைகள் அலறினர். இருந்தும், அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே முனைப்பில் மூவரையும் கீழே வீசிவிட்டேன்.

இறுதியில், என் மனைவியும் கீழே குதிப்பதாகக் கூறினார். ஆனால், அவர் எடை அதிகமாக இருப்பதால் அவரால் குதிக்க முடியவில்லை. நான் அருகில் இருந்த ஜன்னலை உடைத்து, என் மனைவியை வெளியில் கொண்டுவந்தேன். ஒருகட்டத்தில் அவரால் ஜன்னலைப் பிடிக்க முடியாமல் போகவே, அவர் கீழே விழுந்தார். நான் அவரை என் ஒரு கைகளில் தாங்கினேன். பிறகு என்னாலும் நீண்ட நேரம் அவரைத் தாங்கிப்பிடிக்க முடியவில்லை.

அவர் கீழே விழ, தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில் என் மனைவியைக் காப்பாற்றினர். அதன் பின்பு நானும் மாடியில் இருந்து குதித்துவிட்டேன். இதில், எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. என் இளைய மகனுக்கு தீ காயமும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஒரு குடும்பத்தினரிடையே நடந்த இந்தப் போராட்டம், சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!