ஓடும் ரெயிலில் பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ சுட்டுக் கொலை..!


குஜராத் மாநில பா.ஜ.க. துணை தலைவராக முன்னர் பொறுப்பு வகித்தவர் ஜெயந்தி பனுஷாலி. அம்மாநில சட்டசபையில் கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட அப்டாசா தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2007-2012 ஆண்டில் இவர் பதவி வகித்தார்.

ஜெயந்தி பனுஷாலி தன்னை கற்பழித்து விட்டதாக ஒரு பெண் அளித்த பாலியல் புகாரால் குஜராத் பா.ஜ.க. துணை தலைவர் பதவியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது.

அவருக்கு எதிராக குற்றம்சாட்டிய பெண் முன்னர் அளித்த புகாரை திரும்பப் பெற்றதால் ஜெயந்தி பனுஷாலி மீதான வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கட்ச் மாவட்டம் போஜ் நகரில் இருந்து அகமதாபாத் செல்வதற்காக புஜ்-தாதார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெயந்தி பனுஷாலி வந்து கொண்டிருந்தார்.


இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் காந்திதாம்-சுரஜ்பாரி நிலையங்களுக்கு இடையில் ரெயில்
வந்துகொண்டிருந்தபோது அவருடன் ஒரே பெட்டியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று ஜெயந்தி பனுஷாலியை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டு வேறு பெட்டியில் இருந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஜெயந்தி பனுஷாலி(53) ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அருகாமையில் உள்ள மோர்பி காவல் நிலையத்துக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.

ரெயில் மோர்பி நிலையம் வந்தடைந்ததும் ஜெயந்தி பனுஷாலியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!