மகனை கொன்ற கொலையாளிகளை 2 ஆண்டுகளாக தேடி கண்டுபிடித்த தந்தை… அதிர்ந்த காவல்துறை!


ஏறத்தாழ இரண்டாண்டுக் கால போராட்டத்துக்குப் பின்னர், மகனின் கொலைக்கு காரணமான குற்றவாளிகளைத் தந்தையே துப்புத் துலக்கி நீதியின் முன் நிறுத்திய சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. இவ்வழக்கில் அலட்சியமாகச் செயல்பட்ட மும்பை காவல்துறையினருக்கு ஒருபுறம் தலைகுனிவை ஏற்படுத்தினாலும், விசாரணையின் முடிவில் தெரியவந்த தகவல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மும்பை அருகே உள்ள மிரா ரோடு புறநகர்ப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் ஷபிர் கான். இவரின் 13 வயது மகன் மொகமத் கான், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று காணாமல் போனார். சம்பவத்தன்று மொகமத் கான், தான் வசித்து வந்த குடியிருப்பு பகுதியிலிருந்து தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளான். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதைத் தொடர்ந்து இரவு 9 மணி வரை பொறுத்துப் பார்த்த கானின் குடும்பத்தினர், அதன் பின்னர் மொகமத்தின் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள், மொகமத் வேறு யாரோ சிலருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், தாங்கள் மட்டும் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மறுநாள், கானின் குடும்பத்தினர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மிரா ரோடு ரயில் நிலையம் அருகே, ரயிலில் அடிபட்டு ஒரு சிறுவனின் உடல் கிடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கானின் குடும்பத்தினர் பதறியடித்து பிணவறைக்குச் சென்று பார்த்தபோது அது மொகமத் என்பது உறுதியானது.

இதுகுறித்து கானின் பெற்றோர், போலீஸாரிடம் கேட்டபோது, கான் தனது மொபைல் போனில் செல்ஃபி எடுக்கும்போது ரயிலில் அடிபட்டு விபத்துக்குள்ளாகி இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

அப்படியானால், தன் மகன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் எங்கே என்று கேட்டார் ஷபிர். ஆனால், பொருள்கள் எதையும் தாங்கள் கைப்பற்றவில்லை எனப் போலீஸார் தெரிவித்தனர். இது ஷபிர் கானின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சம்பவம் நிகழ்ந்த சில தினங்களுக்கு முன்னர்தான், ஷபிர் கான் தன் மகனுக்கு புதிய மொபைல் போன் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். எனவே, மொபைல் போனுக்காக தன் மகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் கருதினார்.

இதைத் தொடர்ந்து கான், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகனின் மரணம் குறித்து துப்புத் துலக்க களமிறங்கினார். வீட்டுக்கு அருகே நிறுவப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தார். அதில் மாலை 4.40 மணி அளவில் மொகமத் வெளியே செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் பின்னர் 5.40 மணி அளவில் அவனது நண்பன் ஒருவன் மட்டும் திரும்பி வருவதும், அவனுடன் மொகமத் இல்லாமல் இருப்பதும் அந்தக் கேமரா பதிவு காட்சி மூலம் தெரியவந்தது.

“இதுதான் துப்புத்துலக்க எனக்கு முதல் க்ளூவாக அமைந்தது. மொகமத்தின் நண்பனிடம் நான் பேசியபோது அவன் ஏதோ மறைப்பது போன்று தெரிந்தது. நான் விடாமல் அவனிடம் பேசியபோது, அவன் ஓ…வென அழுதான். அவனது பெற்றோர்களோ, ‘நண்பனை இழந்ததால் அவன் அழுகிறான்’ என என்னிடம் சொன்னார்கள்.

தொடர்ந்து விடாமல் அவனை 2 மாதமாகப் பின் தொடர்ந்து சென்று பேசியதில் மொகமத் இறந்ததை அவன் நேரில் பார்த்ததும், அது விபத்தல்ல என்றும் தெரியவந்தது. அவன் சில பையன்களின் பெயர்களைக் கூறினான். அந்தச் சிறுவர்கள் மிரா ரோடு ரயில் நிலையம் அருகே சுற்றித் திரியும் போதை மருந்து உட்கொள்ளும், மோசமான நடத்தைக் கொண்டவர்கள். அவர்கள் மொகமத்துடன் ஏற்கெனவே சண்டையிட்டுள்ளனர். இது குறித்து முன்னரே என் மகன் என்னிடம் கூறியபோது, அது வழக்கமாக சிறுவர்களுக்கு இடையே ஏற்படும் சாதாரண சண்டை என நான் அதை அலட்சியம் செய்துவிட்டேன்.


இந்த நிலையில், மற்ற சிறுவர்களிடம் நான் பேசினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கூறினார்கள். அவர்கள் பேசியது அனைத்தையும் பதிவு செய்தேன். ஏதோ தவறு நடந்துள்ளது என்பது எனக்குப் புலனாகிவிட்டது. ஒரு சிறுவன், மொகமத் தண்டவாளத்தின் மீது ஏறி நின்றதாகச் சொன்னான். மற்றொரு சிறுவனோ, மொகமத் தண்டவாளத்தின் கீழே நின்றதாகச் சொன்னான். மேலும் மொகமத்தின் பிறந்தநாளுக்காக நான் பரிசளித்த மொபைல்போன், அவன் இறந்த பின்னரும் செயல்பாட்டில் இருந்தது. போலீஸார் சொல்லியபடி அவன் செல்ஃபி எடுக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்திருந்தால், போன் உடனே சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கும்” என்று சொன்ன ஷபிர், சிசிடிவி காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட நான் பதிவு செய்த அனைத்து ஆதாரங்களையும் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே கமிஷனரிடம் அளித்துள்ளார்.

இதற்குப் பின்னரே, உயரதிகாரியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கான் கூறுவதில் உண்மை இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆனாலும், நிலைமையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து காவல் நிலையத்துக்கு நடையாய் நடந்தார். “ஒரு கொலை வழக்கை போலீஸார் எவ்வாறு அலட்சியமாகக் கையாள்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். ஏறக்குறையத் தினமும் நான் காவல் நிலையத்துக்குச் சென்றும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இறுதியாக ஏ.டி.ஜி.பி உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்ட பின்னர்தான் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது” என்று சொல்லும் கானுக்கு துணை போலீஸ் கமிஷனர் புருஷோத்தம் கரத் ஆறுதலாக இருந்துள்ளார்.

புருஷோத்தமின் நெருக்குதலைத் தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், விசாரணையில் தெரியவந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்ததோடு, மொகமத் கொலை தொடர்பாக சிலரைக் கைது செய்துள்ளனர்.

“சம்பவத்தன்று, மொகமத் தனது நண்பர்களுடன் ரயில் தண்டவாளம் அருகே சென்றபோது, நான்கு சிறுவர்கள் அவனுடன் சண்டையிட்டுள்ளனர். அதில் ஒருவன், மொகமத் வைத்திருந்த மொபைல் போனைக் கேட்டுள்ளான். மொகமத் மறுக்கவே, அந்தச் சிறுவர்கள் அவனை அடித்துள்ளனர். பின்னர் அவனது பாக்கெட்டிலிருந்த பணத்தையும் எடுக்க முயன்றுள்ளனர். அவன் அதைத் தடுத்து மல்லுக்கட்டவும், ஆத்திரமடைந்த அந்தச் சிறுவர்கள், அப்போது வந்துகொண்டிருந்த ரயிலின் முன்னர் மொகமத்தைத் தள்ளிவிட்டுள்ளனர். இதில் மொகமத் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்” என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறியுள்ள போலீஸார், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், வாக்குமூலத்தில் கொலை தொடர்பாக வேறு யாரையேனும் குறிப்பிட்டால் அவர்களையும் கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மகனின் கொலைக்கு நீதி வேண்டி, ஒரு பாசமான தந்தை நடத்திய போராட்டத்தின் பலனாகக் குற்றவாளி தற்போது நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு ஏறக்குறைய 2 ஆண்டுக் காலம் ஆகியுள்ளது. இது போலீஸாருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!