‘அய்யப்ப பக்தர்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால்…’ கேரள அரசுக்கு பா.ஜனதா எச்சரிக்கை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஒருவர் பலியானார்.

இந்நிலையில், இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை பிரச்சினையில் நடப்பவை அனைத்தும் கேரள அரசின் சதியுடன்தான் நடக்கின்றன. சபரிமலை பிரச்சினை போர்வையில் கேரள அரசு ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளது.

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்துவது வழக்கமானதுதான். ஆனால், அதையும் தாண்டி பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான கண்ணூரில் வன்முறை அதிகமாக உள்ளது. இது, பினராயி விஜயனின் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. அமைதி ஊர்வலம் நடத்தியபோது, வன்முறைக்கு பலியான சந்திரன் உன்னிதன் என்ற பக்தர், மாரடைப்பால் இறந்ததாக பினராயி விஜயன் கூறினார். ஆனால், அவர் தலைக்காயத்தால் இறந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களை கொண்டு கேரள அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இது, அரசு ஆதரவு பெற்ற வன்முறை ஆகும்.

இந்த வன்முறையை கேரள அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் வன்முறை நீடித்தால், அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

சபரிமலை விவகாரம், ஆண்-பெண் சமத்துவம் சம்பந்தப்பட்டது அல்ல. இது, கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதை கேரள அரசும், ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

முத்தலாக் பிரச்சினையையும், சபரிமலை விவகாரத்தையும் முடிச்சுப் போட்டு யாரும் குழப்பிக் கொள்ளக்கூடாது. முத்தலாக் பிரச்சினை, கணவன்-மனைவி உரிமை சம்பந்தப்பட்டது. அது, மத பிரச்சினை அல்ல. அதனால்தான், இஸ்லாமிய நாடுகளில் கூட முதலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நரசிம்ம ராவ் கூறினார். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.