10 கி.மீ. வேகத்தில் அந்தமானை நெருங்கி வரும் ‘பபுக் புயல்’ – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.!


தென் சீன கடலில் உருவான, ‘பபுக்’ என்ற புயல், வங்க கடல் பகுதிக்குள் நுழைந்து உள்ளது. இந்த புயல் வடமேற்கில் நகர்ந்து, மத்திய வங்க கடலுக்குள் நுழைந்து, வட கிழக்கு திசையில் நகர்ந்து, மியான்மர் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில்,

பபுக் புயல் அந்தமானுக்கு தென்கிழக்கே 720 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் தீவுகளை நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நள்ளிரவு அல்லது நாளை அந்தமான் தீவுகளை அடைந்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும்.

பபுக் புயல் அந்தமானில் கரையை கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 7 அல்லது 8-ந்தேதி வாக்கில் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில் பலத்த காற்று வீசும். அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!