பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை..!


வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கல்கோவில் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 15), ஆலங்காயத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்க மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி ஆலங்காயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவி மகாலட்சுமி தினமும் சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார். நேற்றும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்றார்.

மற்ற மாணவிகள் வகுப்புகளுக்குள் சென்றனர். ஆனால் மகாலட்சுமி வகுப்புக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுள்ளார். அந்த பள்ளியில் தரை தளம், முதல் மாடி, 2-வது மாடியில் வகுப்பறைகள் செயல்படுகின்றன.

3-வது தளம் மொட்டை மாடியாகும். மாணவி மகாலட்சுமி நேற்று காலை 3-வது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்து அவர் திடீரென கீழே குதித்தார். கீழே உள்ள கான்கிரீட் தளத்தில் விழுந்த மாணவி மகாலட்சுமி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சியுடன் அங்கு வந்தனர். 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளிக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்தது.

இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். இந்த சம்பவத்துக்கு ஆசிரியர்கள் பதில் கூற வேண்டும். அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் அதன் பிறகே மாணவியின் உடலை கொண்டு செல்ல அனுமதிப்போம் என பெற்றோரும், உறவினர்களும் ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியின் ஆசிரியைகளிடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதை தொடர்ந்து ஆம்புலன்சில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆசிரியர்கள் அளித்த வீட்டுப்பாடத்தை சரியாக செய்யாததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வீட்டில் ஏதும் பிரச்சினை இருந்ததா? அல்லது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை.

இது தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!