மீண்டும் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார்- தனிமையில் தவிக்கும் இளம்பெண் கண்ணீர்..!


சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சென்னையிலும் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மாங்காட்டைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு கர்ப்பமாக இருந்தபோது ரத்த அளவு குறைவாக இருந்ததால் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது.

அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்டு மாதம் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவரது ரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமி பாதித்து இருப்பது தெரிய வந்தது.

அவரது கணவருக்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. நோய் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் வைத்து செலுத்தப்பட்ட ரத்தம் காரணமாகவே தனக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்த பெண் கூறினார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், மருத்துவமனையில் கூறியபோது சரியான பதில் தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 1½ வயது முடிவில்தான் எச்.ஐ.வி. கிருமி உள்ளதா? என்பது கூற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

மாங்காடு இளம்பெண் புகாரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை டீன் வசந்தாமணி மறுத்தார். அவர் கூறும்போது, “ஏப்ரல் மாதம் மாங்காட்டைச் சேர்ந்த இளம்பெண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார். 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது.

ஆகஸ்டு மாதம் சிகிச்சைக்கு வந்தபோது அவருக்கு எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தம் நவீன முறையில் பரிசோதிக்கப்பட்டு அதில் எந்தஒரு தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்புதான் ஏற்றப்பட்டது என்று கூறினார்.


சில மாதங்களுக்கு முன்பே எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மாங்காடு பெண்ணுக்கு தெரிய வந்து விட்டது. ஆனால் அதை வெளியில் சொன்னால் தன்னையும், குழந்தையையும் புறக்கணித்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

தற்போது சாத்தூர் கர்ப்பிணி சம்பவத்துக்கு பிறகு தனக்கும் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவித்ததாக கூறி உள்ளார்.

அவர் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியானதால் அவரை உறவினர்கள் புறக்கணித்து உள்ளனர். இதை மாங்காடு பெண் இன்று கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரை சந்திக்க யாரும் வராததால் வீட்டில் தனிமையில் தவித்து வருகிறார்.

அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணிடம் பேசுவது இல்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

இதற்கிடையே இளம் பெண்ணை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சந்தித்தனர். அப்போது அவருக்கு நிர்வாகிகள் ஜெயந்தி, தனலட்சுமி உள்பட பலர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். மன ரீதியாக கவுன்சிலிங்கும் அளித்தனர்.

பின்னர் மாதர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

“சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலைமை மாங்காட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அவர் உறவினர்கள் புறக்கணிப்பால் தனிமையில் தவிக்கிறார். அவரை சந்தித்து அவருக்காக போராட நாங்கள் இருக்கிறோம்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். ரூ.1 கோடி நஷ்டஈடு, அரசு வேலை வழங்க வேண்டும். இளம்பெண்ணுக்கு ஆதரவாக வருகிற 2-ந்தேதி மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே மாங்காடு பெண் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த பெண் கர்ப்பம் தரிசித்தது முதல் குழந்தை பெற்றது வரை பெற்ற சிகிச்சைகளும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த தகவல்களை கலெக்டரிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் விரைவில் விளக்கம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!