பூட்டிய காருக்குள் தனியாக சிக்கிக்கொண்ட சிறுவன்… அனைவருக்குமான எச்சரிக்கை தகவல்..!


சில நேரங்களில் சிறிய தவறு பெரிய விளைவை ஏற்படுத்தி விடும். அதுபோல திருப்பூரில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் டி.இ.எல்.சி. குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று காலை 10 மணியளவில், ஊத்துக்குளி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவனுடைய உறவினரின் காருக்குள் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது காரின் கதவை பூட்டுவதற்கான பொத்தானில் அந்த சிறுவனின் கை பட்டுள்ளது. இதனால் காரின் கதவு பூட்டிக்கொண்டது. ஆனால், கதவு பூட்டிய விஷயம் அருகில் காருக்கு வெளியே நின்ற உறவினர்களுக்கு தெரியவில்லை.

பின்னர் சிறிது நேரத்தில் சிறுவனை வெளியே எடுப்பதற்காக கதவை திறக்க முற்பட்டனர். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. அப்போதுதான் கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. மேலும் காரில் உள்ள அனைத்து கதவுகளும் பூட்டி இருந்தது. உடனே காரின் சாவியை போட்டு திறக்கலாம் என சாவியை தேடிய போது சாவி காருக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கதவை திறக்க முடியாமல் சிரமப்பட்டனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இந்த சம்பவத்தை பார்த்ததும் காருக்குள் இருக்கும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் இரும்பு கம்பியால் காரின் கதவு கண்ணாடியின் மேல் உள்ள சிறிய இடைவெளியில் விட்டு திறக்க முயன்றனர். ஆனால், திறக்க முடியவில்லை.

இன்னும் சிலர் காரின் வெளியே நின்றபடி, காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுவனிடம் பொத்தானை அழுத்த சொல்லி சைகை காட்டினர். ஆனால், இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் இதுகுறித்த தகவலறிந்து வடக்கு போலீசார் அங்கு வந்தனர். அவர்களும் பொதுமக்களுடன் இணைந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரமாக சிறுவன் காருக்குள் இருந்ததால் சிறுவன் பதற்றமடைய தொடங்கினான். இதனால் அவனது உறவினர் ஒருவர் காரின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைக்க முயன்றார். அப்போது கார் மெக்கானிக் ஒருவர் காரின் அடிப்பகுதியில் சென்று சிறிது நேர முயற்சிக்குப்பின் கதவை திறந்து விட்டார்.

உடனடியாக சிறுவனை காருக்கு வெளியே எடுத்து அவரது உறவினர்கள் மகிழ்ச்சி பெருக்குடன் கட்டியணைத்து முத்தமிட்டனர். அப்போது அங்கு சுற்றி இருந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். வண்டியின் சாவி கையில் இல்லாத ஒரு சிறிய தவறால் நீண்ட நேரமாக நடந்த இந்த போராட்டம் அனைவருக்கும் நல்ல பாடம் தானோ?-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!