வாலிபர் குத்திக் கொலை – போலந்து நாட்டில் ரூம்மெட்ஸ் வெறிச்செயல்!


போலந்து நாட்டு ஐஸ்க்ரீம் கம்பெனியில் வேலை செய்த ஆற்காடு வாலிபர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் உடலை மீட்டுத்தரக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி கதறி அழுதார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் சாம்பசிவபுரத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் வெங்கடேஷ் (25). இவரின் மனைவி கலைச்செல்வி (23). இவர்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நான்கு வயதில் தரீக் என்கிற மகன் உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் போலந்து நாட்டில் உள்ள ஐஸ்க்ரீம் கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக, கோவையைச் சேர்ந்த ஏஜென்சி மூலம் வெங்கடேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர், விடுதி அறையில் நான்கு பேருடன் தங்கியிருந்து ஐஸ்க்ரீம் கம்பெனியில் வேலை பார்த்தார்.

கடந்த 23-ம் தேதி மதியம் போலந்தில் இருந்து தன் மனைவி கலைச்செல்வியிடம் கடைசியாகப் போன் மூலம் பேசினார் வெங்கடேஷ். பின்னர் அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. வெங்கடேஷை போலந்துக்கு அனுப்பி வைத்த ஏஜென்சியில் இருந்து நேற்றிரவு கலைச்செல்விக்குப் போன் வந்தது. ‘‘உன் கணவருடன் அறையில் தங்கியிருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மோதலைத் தடுக்க முயன்ற வெங்கடேஷை ரூம்மெட்ஸ் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர்’’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தனர் ஏஜென்சி தரப்பினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கலைச்செல்வியும் வெங்கடேஷின் உறவினர்களும் கதறி அழுதனர். இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அவர்கள் வந்தனர். கலெக்டர் ராமன் இல்லாததால், கலெக்டர் அலுவலகப் பொது மேலாளர் முரளியைச் சந்தித்தனர்.

அவரிடம், ‘‘வெளியுறவுத்துறை மூலம் வெங்கடேஷின் உடலை மீட்டு எங்களிடம் ஒப்படையுங்கள். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேளுங்கள். போலந்து போலீஸாரின் விசாரணையை அறிந்து தகவல் கூறுங்கள். இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பா.ஜ.க-வினர் வந்திருந்தனர். மனு கொடுத்த பிறகு, வெங்கடேஷின் மனைவி ‘என் வாழ்க்கையே போச்சே…’ என்று கதறி அழுதபடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதைப் பார்த்தவர்கள் கண் கலங்கினர்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!