இந்தோனேசியாவை சூறையாடிய சுனாமி – உயிரிழப்பு 281 ஆக உயர்வு..!


இந்தோனேசியா, 17 ஆயிரத்து 500 தீவு கூட்டங்களை கொண்ட நாடு. அவற்றில் 6 ஆயிரம் தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாடு எரிமலை வளையத்தில் அமைந்திருப்பதால் இங்கு சுமார் 150 எரிமலைகள் இருக்கின்றன. இதன்காரணமாக நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நடந்தபடி உள்ளன.

சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பாக 2004-ம் ஆண்டு இதே போன்ற டிசம்பர் மாதம் 26-ந் தேதி, இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுகளை ஏற்படுத்தி, லட்சக்கணக்கானோரின் உயிர்களைப் பறித்து, வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக ஆகிவிட்டது. அந்த சுனாமியில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஜாவா கடலை, இந்தியப்பெருங்கடலுடன் இணைக்கிற சுந்தா ஜலசந்தி உள்ளது. அந்த ஜலசந்தியில் அமைந்துள்ள அனக் கிரகட்டாவ் எரிமலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன. இந்த பேரலைகள் அந்த நாட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

ஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் பலவும் உருக்குலைந்து போய் விட்டன.ஜாவா தீவில், கடற்கரைகளையும், தேசிய பூங்காவையும் கொண்டிருந்து சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற பாண்டெக்லாங்கில் சுனாமி பேரலைகள் 160-க்கும் மேற்பட்ட மக்களை வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட்டது.

சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுனாமி பேரலைகளில் கட்டிடங்களுடன் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களும் அடித்துச்செல்லப்பட்டன. சுனாமி பற்றி எந்த முன்எச்சரிக்கையும் விடப்படவில்லை.

சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இன்று காலை நிலவரப்படி, சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 281 ஆக உள்ளது. இதை இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உறுதி செய்துள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 500 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய சுனாமியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!