சங்கரின் பெயரை வைத்து இனி எதுவும் செய்யக் கூடாது – கவுசல்யாவிற்கு அதிரடி உத்தரவு..!


ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் ஊரான குமரலிங்கத்தில், கவுசல்யாவிற்கு எதிராக கூட்டம்போட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கவுசல்யா, சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால், கவுசல்யாவின் பெற்றோர் சங்கரை ஆணவப் படுகொலை செய்தனர். 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தமிழகத்தையே உலுக்கியது. பல அரசியல் தலைவர்களும் இந்த ஆணவப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் போது கவுசல்யாவும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

இதையடுத்து கவுசல்யாவின் அப்பா, அம்மா உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே கவுசல்யா ஆணவப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே கோவையைச் சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை கவுசல்யா சமீபத்தில் சுயமரியாதை மறுமணம் செய்து கொண்டார். கோவையில் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. சங்கரின் குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்துடன் தனது திருமணம் நடைபெற்றதாக கவுசல்யா தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் ஊரான குமரலிங்கத்தில், கவுசல்யாவிற்கு எதிராக கூட்டம்போட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுசல்யா வீட்டில் வெளியாட்கள் வந்து தங்குவதாகவும், இவ்வளவு காலம் இந்தப் பகுதியில் நடக்காத சம்பவங்கள் நடப்பதாகவும், காவல்துறை வெளியாட்கள் வந்து தங்க அனுமதிக்க கூடாது எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சங்கரின் ரத்தம் காய்வதற்குள் கவுசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் அமைதியான இப்பகுதியில் கலவரம் நடக்கும் அபாயம் உள்ளதாகவும், சங்கரின் பெயரை வைத்து இனி எதுவும் செய்யக் கூடாது எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

“சங்கர் மரணத்திற்கு பின் கவுசல்யா சங்கரின் குடும்பத்தோடு மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் இருந்தது எங்களுக்கே சந்தோஷமாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நடத்தையில் சிறிய மாற்றம் தெரிகிறது. கடந்த வாரம் கூட இரண்டு பெண்கள் கவுசல்யாவின் குடும்பத்தில் வந்து தங்கினர்.

அந்தப் பெண்களைத் தேடி இரவில் போலீசார் வருகின்றனர். அவர்கள் நல்லவர்கள் என்றால் இரவில் அவர்களை ஏன் போலீஸ் தேடி வர வேண்டும்..? கவுசல்யா சில கட்சிகள், அரசாங்கத்திற்கு எதிரான அமைப்புகளோடு தொடர்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிக்கிறார். இதுமட்டுமின்றி கவுசல்யா நடத்தும் பறை வகுப்புகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது” எனக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கிராம கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கும், சங்கரின் குடும்பத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.-Source: puthiya.thalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!