அப்பல்லோவை தொடர்ந்து சிறையிலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சசிகலா..!


அப்பல்லோவில் மட்டுமல்ல பெங்களூர் சிறையிலும் சொகுசு வாழ்க்கையை சசிகலா தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா இருவரையும் பிரித்து பார்க்க முடியாது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது என்னதான் கட்சி ரீதியில் முக்கிய முடிவுகளை அவர் அறிவித்திருந்தாலும் அதன் பின்புலத்தில் சசிகலா இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சசிகலா எப்போதும் போயஸ் தோட்டத்திலேயே இருந்துள்ளார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டத்தில் இருந்திருந்தாலும் ஜெயலலிதாவுடன் நட்பு கிடைத்தவுடன் சசிகலாவின் ரேஞ்சே மாறிவிட்டது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் ஜெயலலிதா அனுபவித்த அனைத்து சொகுசு வசதிகளையும் அவரும் அனுபவித்தார். அந்த வகையில்தான் ஜெயலலிதாவை அப்பல்லோவில் சேர்த்த போதும் அவர் சொகுசு அறையிலேயே தங்கியிருந்திருக்கிறார்.


இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. அதில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் மொத்த மருத்துவ செலவு ரூ. 7 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா தங்கி சிகிச்சை பெற்ற அறையின் வாடகை 75 நாட்களுக்கு ரூ. 24 லட்சம்தான்.

ஆனால் சசிகலா குடும்பத்தினர் தங்கிய அறைக்கான வாடகை மட்டும் 1.24 கோடியாகும். இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. நோயாளியை காட்டிலும் அவரை பார்த்து கொள்ள வந்தவர்களின் செலவு அதிகமாகியுள்ளது. ஜெயலலிதா தங்கியிருந்த அறை வாடகையை விட இது பல மடங்கு அதிகம் ஆகும்.

இது போல் தொடர்ந்து சொகுசாக இருந்த சசிகலாவால் திடீரென பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டவுடன் அவரால் கொசுக் கடியிலும் பஞ்சு மெத்தை இல்லாமலும் இருக்க முடியவில்லை. இதனால் சிறைக்கு சென்றும் திருந்தாமல் அங்கும் சிறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை இறைத்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

சசிகலாவுக்கென ஓர் அறை அல்ல, மொத்தம் 5 அறைகளை பெற்றிருந்தார். அதோடு தனி சமையல் செய்ய பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் வைத்திருந்தார். இதை கர்நாடக மாநில போலீஸ் அதிகாரி ரூபா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அப்பல்லோ பில்லை பார்த்ததிலிருந்து ஏனோ இந்த சிறை விவகாரத்தை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!