நாட்டு கோழிக்கு கண் அறுவை சிகிச்சை… திண்டுக்கல் மாணவி செய்த நெகிழ்ச்சி செயல்..!


திண்டுக்கல் சீலப்பாடி முத்தையா நகரை சேர்ந்தவர் அசோக். அவருடைய மகள் கோகுல சாந்த பிரியா (வயது 16). 10-ம் வகுப்பு மாணவி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி குஞ்சு வாங்கி வந்தார். அதனை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். பள்ளிக்கு செல்லும் முன்பும், மாலை வீட்டுக்கு வந்தபிறகும் அதற்கு உணவு அளித்து கவனமாக பராமரித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அந்த கோழி தடுமாறி நடந்து வந்ததுடன் சோர்வாகவும் காணப்பட்டது. அதனை பிடித்து பார்த்தபோது, அதன் இடது புற கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. மேலும், கண்ணின் அடி பகுதியில் ஒரு கட்டி ஒன்றும் உருவாகி இருந்தது. இதனை பார்த்த கோகுல சாந்த பிரியா சோகமாக காணப்பட்டார்.

மேலும், கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்து வந்தார். மகளின் சோகத்தை அறிந்த அவருடைய தந்தை, கோழியை சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக கூறினார். அதன்படி, திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கோழியை அசோக் கொண்டு சென்றார்.

அதனை பரிசோதித்த டாக்டர், கண்ணில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று காலை கோழிக்கு ‘அனஸ்தீசியா’ என்ற மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதில் கோழி மயங்கியவுடன் அறுவை சிகிச்சை தொடங்கியது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த அறுவை சிகிச்சையில் கண் அருகே உள்ள கட்டி வெட்டி அகற்றப்பட்டது.

பின்னர், அந்த இடத்தில் தையல் போட்டு மருந்து வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த கோழி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனை பார்த்த கோகுல சாந்த பிரியா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாறு டாக்டர் அறிவுறுத்தினார். இதற்காக, கோழியின் கழுத்தில் வட்ட வடிவ தாள் பொருத்தப்பட்டது.

‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோழி, ஆடு போன்றவற்றை கொன்று சாப்பிடும் மனிதர்களிடையே, தான் வளர்த்து வந்த கோழிக்கு ஏற்பட்ட கட்டியை நினைத்து மாணவி 2 நாட்கள் சரிவர சாப்பிட முடியாமல் தவித்துள்ளார். அவருடைய மனிதாபிமானத்தை அறிந்து சுற்று வட்டார பகுதியினர் பாராட்டினர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!