காற்றழுத்த மண்டலம் புயலாக மாறுகிறது – 15ந்தேதி சென்னையை நெருங்கும்..!!


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

இதன் காரணமாக வருகிற 15-ந்தேதியும், 16-ந்தேதியும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் கடல் காற்று வீசும்.


தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையும், அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இன்றைய நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்தமானது நாளை புயலாகவும், பின்னர் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

15-ந்தேதி காலை சென்னையை நெருங்கும், 16-ந்தேதி ஆந்திரா நோக்கி நகரும். 17-ந்தேதி அதிகாலை நெல்லூருக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே மசூலிப்பட்டனம் அருகே கரையை கடந்து வலுவிழந்து காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று தனியார் வானிலை இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.

அதன்பிறகு தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 19-ந்தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் காற்றின் போக்கால் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!