சேலத்தில் சொகுசு பஸ் தீப்பிடித்ததால் பரபரப்பு – பீதியில் மக்கள்..!!


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கடுவமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் (வயது 45). இவர் புதிதாக சொகுசு பஸ் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த பஸ்சை கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து கொச்சிக்கு கொண்டு வருவதற்காக இவர் தனது நண்பர்கள் 3 பேர் மற்றும் சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த டிரைவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் பெல்காமிற்கு சென்றார்.

அங்கிருந்து புத்தம் புதிய ஏ.சி. வசதியுடன் கூடிய சொகுசு பஸ்சை டிரைவர் மீனாட்சி சுந்தரம் ஓட்டி வந்தார். பஸ்சில் மணிசும், அவருடைய நண்பர்கள் 3 பேரும் உடன் வந்தனர். இந்த பஸ் நேற்று மாலை 4 மணியளவில் சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த நரிப்பள்ளம் அருகே தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்சை லாரி ஒன்று வேகமாக முந்தி வந்தது. பின்னர் லாரி டிரைவர், பஸ்சின் பின் பகுதியில் தீப்பிடித்து எரிவதாக பஸ் டிரைவரிடம் கூறிவிட்டு அங்கிருந்து லாரியை ஓட்டிச்சென்றார். உடனே டிரைவர் மீனாட்சி சுந்தரம் பஸ்சை சாலையில் நிறுத்தினார். பின்னர் அவரும், பஸ் உரிமையாளர் மணிஷ் மற்றும் நண்பர்கள் 3 பேரும் பஸ்சில் இருந்து அவசர, அவசரமாக இறங்கி பின்னால் சென்று பார்த்தனர். அப்போது பஸ்சில் தீப்பிடித்து மளமளவென எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினரும், ஓமலூர் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் சாலையில் நிறுத்தி இருந்த பஸ்சில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைக்க முயன்றனர்.

அதே நேரத்தில் அந்த பஸ்சின் டேங்கர் வெடித்து சிதறிவிடும் அபாயம் இருந்ததால், அந்த சாலையில் போக்குவரத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு போலீசார் நிறுத்தினர். அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப்பாதையை ஒருவழிப்பாதையாக போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்தனர். இதற்கிடையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததை கேள்விப்பட்டு அந்த பகுதியில் ஏராளமானோர் அங்கு கூடினர்.

அதே நேரத்தில் அந்த பஸ் எரிந்து கொண்டிருந்த இடத்தின் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று இருந்ததால், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு வராத வகையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் அந்த பஸ் முற்றிலும் எரிந்து உருக்குலைந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.

தீ விபத்தில் எரிந்து போன பஸ்சின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கிய நிலையிலேயே, பஸ்சின் டிரைவர் மற்றும் உரிமையாளர்கள், நண்பர்கள் என 5 பேரும் அதில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு எண் கூட பெறாத நிலையில் புத்தம் புதிய சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!