ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியது – அதிர்ச்சியில் மைத்திரி..!


இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26–ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் அறிவித்தார். ஆனால் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது.

பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானங்களில் அவர் தோல்வி அடைந்தார். ஆனால் இதை சிறிசேனா ஏற்க மறுத்ததுடன், ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக மீண்டும் நியமிக்கமாட்டேன் எனவும் மறுத்து வருகிறார். இதனால் இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாசா கொண்டு வந்த இந்த தீர்மானம் மீது பின்னர் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் உள்பட 117 பேரின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேறியது. விக்ரமசிங்கேவை ஆதரிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், அதிபரின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்களும் பங்கேற்று இருந்தால், இந்த தீர்மானத்துக்கு இன்னும் அதிக ஆதரவு இருந்திருக்கும் என ரனிலின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சிறிசேனாவின் ஐக்கிய மக்களின் சுதந்திர கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் புறக்கணித்து வருவதால், இந்த ஓட்டெடுப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. அத்துடன் இந்த தீர்மானத்தை ஏற்கமாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்து உள்ளனர். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த மோதலுக்குப்பின் அவர்கள் தொடர்ந்து கூட்டத்தொடரை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் நாட்டில் அக்டோபர் 26–ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என சிறிசேனாவுக்கு, சஜித் பிரேமதாசா கோரிக்கை விடுத்து உள்ளார். இந்த தீர்மானம் நிறைவேறி இருப்பது, சிறிசேனாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!