திடீரென தீ பிடித்த சொகுசு பஸ் – மயிரிழையில் உயிர் தப்பிய 40 பயணிகள்..!!


மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 40 பயணிகளுடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் மாதேஸ்வரன் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் மலைப்பாதையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ்சின் பின்புறத்தில் இருந்து புகை வெளிவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். அந்த நேரம் திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து மாதேஸ்வரன் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கினார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அப்போது தீ அணைந்து விட்டதாக நினைத்து தீயணைப்பு துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் பஸ்சில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் பஸ்சில் தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.

இதைப் பார்த்து பயணிகளும், மற்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. இந்த சம்பவம் காரணமாக சேலம்-தர்மபுரி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சொகுசு பஸ்சில் தீப்பிடித்ததை டிரைவர் உடனடியாக கவனித்ததால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!