111 வயதான கர்நாடக சாமியாருக்கு நடந்த அறுவை சிகிச்சை…!


கர்நாடகாவை சேர்ந்த 111 வயது சாமியாரான சிவகுமார் சாமி ஈரல் அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி உள்ளார்.

பெங்களூருவுக்கு மேற்கே 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தும்கூர். இங்குள்ள சித்தகங்கா மடத்தை சேர்ந்த சாமியார் சிவகுமார் சாமி 111 வயதானவர் ஆவார். இவர் கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்தார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு உடனடியாக ஈரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.

அதைத் தொடர்ந்து சிவகுமார் சாமியை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் என அழைக்கப்படும் விமானம் மூலம் அழைத்து வந்துள்ளனர். அவரை உடனடியாக சென்னையில் உள்ள ரிலா இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு கடந்த வெள்ளிக்கிழமகை அவருக்கு ஈரலுக்கும் சிறு குடலுக்கும் இடையில் உள்ள குழாயில் பைபாஸ் சர்ஜரி நடந்துள்ளது. வலி மறக்கச் செய்யும் மருந்து அளிக்கப்பட்டதால் சிவகுமார் சாமி தனக்கு நடக்கும் அறுவை சிகிச்சையை முழுவதுமாக பார்த்துள்ளார். அத்துடன் அறுவை சிகிச்சை முடியும் வரை அவர் சுயநினைவுடன் இருந்துள்ளார்.

இந்த மருத்துவமனையின் தலைவர் முகமது ரிலா, ‘சாமியாரின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. வலி மறக்கச் செய்யும் மருந்தின் தாக்கம் தற்போது அவரிடம் முழுவதுமாக இல்லை. தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள அவர் சுயநினைவுடன் உள்ளார். விரைவில் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட உள்ளார்’ என தெரிவித்துள்ளார்.-source: patrikai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!