விஷ ஊசி வேண்டாம்.. மரண தண்டனை கைதியின் உயிரைப் பறித்த மின்சார நாற்காலி..!


அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டேவிட் ஏர்ல் மில்லர், 1981-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 36 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்றுமுன்தினம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. டென்னிசி மாகாணத்தை பொறுத்தமட்டில் பொதுவாக விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது வழக்கம்.

இது நீடித்த மற்றும் மிக வேதனையான மரணத்தை தரும். எனவே விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றினால் தனக்கு வலி அதிகம் இருக்கும் என கூறிய டேவிட் ஏர்ல் மில்லர், தன்னை மின்சார நாற்காலியில் அமர வைத்து, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் மாலை உள்ளூர் நேரப்படி 7.25 மணிக்கு தலைநகர் நாஸ்வில்லேவில் உள்ள சிறைச்சாலையில் டேவிட் ஏர்ல் மில்லரை மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது அங்கு முதல் முறை அல்ல. கடந்த 2013-ம் ஆண்டு சகோர்ஸ்கி என்கிற கைதி, இதே போன்று தனக்கு விஷ ஊசி வேண்டாம் என்றும் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனையை நிறைவேற்றும் படியும் கேட்டார். அதன்படியே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!