அதிமுகவினரை கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது..!


‘சர்கார்’ பட பிரச்னையில் அதிமுகவினருக்கு அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த இரண்டு இளைஞர்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் அரசை அவமதிப்பது போலவும், மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிய அவர்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்னால் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களைக் கிழித்தெறிந்தனர்.

மேலும் சில இடங்களில் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் படத்தின் காட்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ‘சர்கார்’ படத்தை இரண்டாவது முறையாகத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிய படக்குழு, குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை நீக்கியது. இதனால், ‘சர்கார்’ சர்ச்சை ஓய்ந்தது.

இந்த சமயத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், சென்னையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இரண்டு பேர் கையில் அரிவாளுடன், சர்கார் படத்துக்கு இடையூறு விளைவித்ததாக கூறி அதிமுகவினரை கடுமையான வார்த்தைகளால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியிருந்தனர்.

இதுத்தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய், அனிஷேக் (வீடியோவை பதிவுசெய்து வெளியிட்டவர்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சஞ்சய் மற்றும் அனிஷேக் இருவரையும் கைது செய்துள்ள போலீஸார், குற்றசெயலுக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லிங்கதுரை தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!