நள்ளிரவில் வீட்டுக்குள் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு – அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!


புதுவை மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரியான இவர் வெளியூர் சென்றிருந்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி விஜயா, மகன் வசந்த் (வயது 19), மகள் சந்தியா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தநிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் ‘புஸ்புஸ்’ என்று சத்தம் கேட்டுள்ளது.

இதனால் கண்விழித்த விஜயா மின்விளக்கை போட்டு பார்த்தபோது நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியதை கண்டு திடுக்கிட்டார். உடனே தனது மகன், மகளை எழுப்பி வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார். நள்ளிரவு நேரத்தில் அக்கம்பக்கத்தினரை அழைக்க முடியாத சூழலில் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது குறித்து செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வனத்துறை நம்பரை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர். அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த அரசு டைரியினை எடுத்து பார்த்து அதில் இருந்த முதல்-அமைச்சரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். நள்ளிரவு நேரமாக இருந்தபோதிலும் தூக்க கலக்கத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போனை எடுத்து பேசினார்.

அவரிடம் விஜயாவின் மகன் வசந்த் தனது வீட்டிற்குள் பாம்பு புகுந்ததையும், வனத்துறைக்கு தொடர்பு கொண்டபோது யாரும் போனை எடுக்கவில்லை என்றும் கூறினார். அவருக்கு தைரியம் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி பாம்பை பிடிப்பதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்படி வனத்துறை இயக்குனர் குமாரை தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து குமார் வனத்துறை ஊழியர்கள் கோபி மற்றும் தாமரைசெல்வன் ஆகியோரை அனுப்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடிக்க உத்தரவிட்டார். உடனடியாக அங்கு விரைந்த ஊழியர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பினை பிடித்து அப்புறப்படுத்தினர். இதன்பிறகே அந்த வீட்டில் இருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!