அந்தமான் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு…!


கன்னியாகுமரியை புரட்டிப்போட்ட ஒக்கி புயல், வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 3-4 தினங்களில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.


புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது தமிழக கடற்கரைக்கு அப்பால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 17 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், இன்றும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சீர்காழியில் 19 செ.மீ., சிதம்பரம், ஆனைக்காரன்சத்திரம் பகுதியில் தலா 18 செ.மீ., சிதம்பரத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியைவிட 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. ஒக்கி புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!