உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்.. எத்தனை கோடிகள் தெரியுமா?


உலகிலேயே யூ டியூப் மூலம் அதிகம் வருமானம் ஈட்டுவது 7 வயது நிரம்பிய குட்டி சிறுவன்தான் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ரேயான் என்ற சிறுவன்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரன். 7 வயதே ஆகும் இவன்தான் உலகிலேயே அதிக அளவில் யூ டியூப் மூலம் வருமானம் ஈட்டுகிறான்.

உலகம் முழுக்க யூ டியூபில் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் செய்யாத சாதனையை கடந்த ஒரு வருடத்தில் இந்த சிறுவன் செய்துள்ளான். இந்த 2018ம் ஆண்டு முழுக்க யூ டியூப் வீடியோக்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய சிறுவன் இவன்தான்.

ரேயான் வைத்திருக்கும் யூ டியூப் சேனல் பெயர் ரேயான் டாய்ஸ் ரிவ்யூ. இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில், இவன் கடந்த 12 மாதத்தில் மட்டும் 154 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறான். இரண்டாவது இடத்தில் ஜேக் பால் என்ற நபர் உள்ளார். இவர் 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்த குட்டி சிறுவனின் யூ டியூப் சேனல் 2015ல் இவன் 4 வயது இருக்கும் போது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறுவனின் யூ டியூப் சேனல் 17 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு இருக்கிறது. இதில் இருக்கும் வீடியோக்கள் 26 மில்லியன் முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டு இருக்கிறது. இதில் இந்த சிறுவன், சிறுவர்களின் விளையாட்டு பொருட்களுக்கு ரிவ்யூ வழங்கி வருகிறான்.


இவன் ரிவ்யூ வழங்கும் விளையாட்டு பொருட்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது. இவன் ஒரு பொருளுக்கு நல்ல ரிவ்யூ கொடுத்துவிட்டால், அது மார்க்கெட்டில் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதாக போர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டு இருக்கிறது. இதனால்தான் இவன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறான்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இவனுக்கு வால்மார்ட் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தது. அதன்படி தனது வால்மார்ட் ஷோரூமில், ரேயான் வேர்ல்ட் என்று பெயரில் தனி பிரிவையே இவனுக்காக உருவாக்கியது. குட்டிஸ் எல்லாம் இங்கு வந்துதான் அதிக அளவில் பொருட்கள் வாங்குகிறார்கள். இதனால் தங்களின் வருமானம் 8 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்று வால்மார்ட் கூறியுள்ளது.

ஆனால் இவன் இந்த பணத்தை இப்போது மொத்தமாக எடுக்க முடியாது. இந்த பணத்தில் 15 சதவிகிதம் இப்போது அவன் வங்கி கணக்கிற்கு செல்லும். அதை அவன் வளர்ந்த பின் எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள பணத்தை இவன் இப்போதே செலவு செய்ய முடியும்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!