பட்டுசட்டை, விபூதி,கூலிங் கிளாசுடன் களமிறங்கிய விஜயகாந்த் – தொண்டர்கள் உற்சாகம்..!


விபூதி, கூலிங் கிளாஸ், பட்டு சட்டை சகிதம், தங்களுக்கான ஒரு தனி வெப்சைட்டை துவக்கி வைத்துள்ளார் விஜயகாந்த். இதன்மூலம் தேமுதிக அடுத்த கட்டத்துக்கு நகர்வது தெளிவாகி உள்ளது.

அரசியலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விறுவிறுவென மேலே வந்த விஜயகாந்த், அதே வேகத்தோடு விறுவிறுவென கீழே இறங்கி ஒதுங்கியும் விட்டார். உடல் உபாதையில் அவதிப்பட்டு விஜயகாந்த்தை மக்கள் இன்னும் மறக்கவில்லைதான்.

சாய்ந்துகிடக்கும் தேமுதிகவை தூக்கி நிறுத்த குடும்ப உறுப்பினர்கள் களம்இறங்கி விட்டனர். பிரேமலதா பொருளாளர் பொறுப்பை, எடுக்க மகன் விஜயபிரபாகரன் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார். ஒரு மாத காலமாகவே தேமுதிக தனது செயல்பாட்டினை துவக்கி உள்ளது.

குறிப்பாக கஜா புயல் நிவாரண பணிகளுக்கு தேமுதிக தனது பங்களிப்பை அளித்து வருகிறது. அதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பிரேமலதா நேரடியாகவே களத்துக்கும் சென்று வருகிறார். செய்தியாளர்களின் சந்திப்புகளின் போதெல்லாம் வழக்கம்போல், திமுக, அதிமுகவை வாரி விட்டு பேசி வருகிறார்.


கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் ஓரளவு கூட்ணி குறித்து அரசல் புரசலாக பேசிவரும் நிலையில், தேமுதிக இதை பற்றி வாயே திறக்காமல் உள்ளது. ஆனால் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று பிரேமலதா சொல்லி வருகிறார். அதிமுக, திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிந்து விட்டது. மீதமிருக்கும் யாருடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என இதுவரை தெரியவில்லை.

ஆனால் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தேமுதிக இறங்கி உள்ளது. உறுப்பினர் சேர்க்கை ஒரு புறம் நடந்து வருகிறது. மற்றொரு புறம் இளைஞர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் விஜய பிரபாகரன். இந்நிலையில் தேமுதிகவுக்கென தனி வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தான் இதனை தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளார். இதுசம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. நீண்ட நாள் கழித்து, பட்டுசட்டை, விபூதி, கூலிங் கிளாசுடன் விஜயகாந்த்தை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
தேமுதிக கட்சிக்கென அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதால், கட்சி வேலைகள் இனி ஜரூராக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக பதவி நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் எல்லோரும் விஜயகாந்த்தை சந்தித்த வாழ்த்துக்களை பெற்று கொண்டனர்.

இதனை தொடர்ந்து விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. அப்போது கட்சியின் வளர்ச்சி குறித்து நிறைய அறிவுரைகளை விஜயகாந்த் சொன்னாராம். எப்படியோ தேமுதிகவின் மறு அத்தியாயம் வெட்சைட் மூலம் உருவாகி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!