தமிழிசை டாக்டர் இல்ல ஒரு விஞ்ஞானி! கலாய்த்த கமல்

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அரசு எந்திரம் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும். நான் சொல்வதெல்லாம் அரசின் காதுக்கு எட்டுமா? என்று தெரியவில்லை. மிகச்சிறிய 10-க்கு 10 அறையில் 150-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது நல்லதல்ல, ஆரோக்கியமானதல்ல. இன்று பெய்துள்ள மழை மேலும் பொதுமக்களை பாதிக்க செய்யும். எனவே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற போது பல்வேறு இடங்களில் பொது மக்கள் பலர் கோ‌ஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். நான் செல்லும் போது அவர்கள், நாங்கள் எதற்காக செல்கிறோம் என்பதை அறிந்து வழிவிட்டார்கள். இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம், இந்த அரசு மக்களை ஏழ்மையாக ஆக்கி வருகிறது என்று நேற்று நீங்கள் பேட்டியளித்தீர்கள். இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் ஆராய்ச்சி செய்து சொல்லட்டும் என்று கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு விஞ்ஞானி. நான் ஒரு சமூக சேவகர் என்று கூறி விட்டு சென்றார். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.