நிவாரண பொருட்களுடன் வந்த வாகனம் – கிராம மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!


‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு பலர் உதவி புரிந்து வருகின்றனர். பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மெழுகுவர்த்தி, பால் பவுடர், பிஸ்கட் பாக்கெட் டுகள், நூடுல்ஸ், தின்பண்டங்கள், ஆடைகள், செருப்புகள், கொசுவர்த்தி, நாப்கின்கள், சோப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் ஒரு மினி வேனில் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைப்பதற்காக சென்றனர். அவற்றை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் நேரடியாக சென்று வழங்கினர்.


பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்திற்கு சென்று நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு வழங்கி விட்டு பின்னர் புறப்பட்டுள்ளனர். அப்போது பொதுமக்களுக்காக மாணவர்கள் நிவாரணப்பொருட்கள் எடுத்து வந்த மினிவேன் காலியாக புறப்பட்டது.

இதனை பார்த்த போது மக்கள் ஏன் வெறும் வண்டியாக போகிறீர்கள் என கேட்டதோடு, மாணவர்கள் வந்த வண்டிகளில் புயலால் சாய்ந்து கிடந்த மரங்களில் இருந்த 200 இளநீர் காய்களை பறித்து ஏற்றி வைத்து வழியனுப்பி வைத்தனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!