கஜா புயலால் 4 லட்சம் பேர் வீடு இழந்து தவிப்பு – கண்டு கொள்ளாத மத்திய அரசு..!


தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட மக்களை கதற வைத்த கஜா புயலின் சோகம் இன்னும் தீரவில்லை.

ஒரே நாளில் மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்து விட்ட கஜா புயல், ஒரு வாரம் ஆகியும் மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டுள்ளது.

4 மாவட்டங்களிலும் சுமார் 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதில் சுமார் 40 லட்சம் தென்னை மரங்களாகும். இதனால் தென்னையை நம்பி வாழ்ந்து வந்தவர்கள் வாழ்க்கை தலைகீழாக புரண்டுள்ளது. இதே போல மா, பலா மரங்களை வளர்த்து வந்தவர்களின் நிலையும் பரிதவிப்புக்குள்ளாகி இருக்கிறது.

நெற்பயிர்கள் மற்றும் வாழையை இழந்துள்ள விவசாயிகள், 1200 படகுகளை இழந்துள்ள மீனவர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சமாளித்து டெல்டா மாவட்ட மக்கள் எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்ற வேதனையும், கேள்விக்குறியும் தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது.

வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள சுமார் 2 லட்சம் பேர் 650-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். தங்கள் கிராமங்களில் இயல்பு நிலை திரும்பாததால் அவர்கள் தொடர்ந்து முகாம்களையே நம்பி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவிப்புக்கிடையே உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதும் மக்களுக்கு கடும் சவாலாக உள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். சுமார் 3 லட்சம் பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் 4 மாவட்டங்களில் அனைத்து ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டு இருப்பதால் நிவாரணப் பணிகளை திட்டமிட்டப்படி செய்து முடிக்க இயலவில்லை. தடைகளை கடந்தே நிவாரணப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் நிவாரண பணிகள் மந்தமான நிலையில் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கஜா புயல் தாக்கப் போவதற்கு முன்பு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்திருந்த தமிழக அரசு, அந்த புயல் இந்த அளவுக்கு மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி விடும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்டா மாவட்ட மக்களும் தங்களை புயல் புரட்டி போட்டு விடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதனால் புயல் தாக்கும் பட்சத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் மிக, மிக குறைவாகவே இருந்தது.


குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் கஜா புயலை நினைத்து மக்கள் பயப்படாமல் இருந்தனர். அந்த கிராமங்களுக்குள் நுழையக் கூட முடியாத அளவுக்கு சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப் பகுதிகளை நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் இன்னமும் சிரமம் நீடிக்கிறது.

சரிந்து விழுந்துள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்களை முழுமையாக அகற்றினால்தான் நிவாரணப் பொருட்களை கிராமங்களுக்குள் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் உணவு மற்றும் குடிநீருடன் டெல்டா பகுதிக்கு செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

பெரும்பாலான இடங்களில் இடிந்த வீடுகள், சரிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றினால், நிவாரண உதவி கிடைக்காமல் போய் விடும் என்ற தவறான வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அத்தகைய ஊர் மக்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்து மரங்கள், இடிந்த வீடுகளை அகற்றி வருகிறார்கள். மரங்களை அகற்றும் உபகரணங்கள் குறைவாக இருப்பதும் நிவாரண பணிகள் தாமதமாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

வேரோடு சாய்ந்த 2.17 லட்சம் மரங்களில் நேற்று வரை 91 ஆயிரத்து 960 மரங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. சரிந்து விழுந்த 1.03 லட்சம் மின் கம்பங்களில் 13 ஆயிரத்து 848 மின் கம்பங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. இவை முழுமையாக அகற்றப்பட்டால்தான் நிவாரணப் பணிகளை 100 சத வீதம் விரைவாக செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இதற்கிடையே கஜா புயல் சேத விபரங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வரும் அதிகாரிகள் மூலம் தினமும் அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. புயல் சீற்றத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்த மரங்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை.

இந்த நிலையில் வீடுகளை இழந்து தவிப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் தாக்கிய பிறகு முதல் 2 நாட்களில் சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.


நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தகவலில், புயலுக்கு 1½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று, டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.

வீடுகளை இழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் முகாம்களில் தங்கி உணவு பெற்று அரசின் பல்வேறு உதவிகளையும் பெற்று வருகிறார்கள். மற்ற 60 சதவீதம் பேர் அதாவது சுமார் 2½ லட்சம் பேர் வீடுகளை இழந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவியை எதிர்பார்க்காமல் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களில் 6955 திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதில் 6204 குடிநீர் திட்டங்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது.

அரிசி, கோதுமை மற்றும் உணவுப் பொருட்களும் தேவைக்கு ஏற்ப டெல்டா மாவட்ட பகுதிகளில் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலும் அதிகமாக அனுப்பப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடக்கிறது.

ஆனால் இந்த நிவாரணப் பொருட்கள் கிராம மக்களிடம் விரைவாக, தினமும் சென்று சேரவில்லை என மனக்குறை 70 சதவீத மக்களிடம் உள்ளது. மின்சாரம் இல்லாததும் மக்களிடம் குமுறலை அதிகப்படுத்தி உள்ளது.

மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்து, உணவு பொருட்கள் சப்ளையும் சீராகி விட்டால் டெல்டா மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும். ஆனால் அந்த சுமூக நிலை திரும்ப எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!