கந்துவட்டி கொடுமையால் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!


தருமபுரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைதிலி (வயது 31). பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம்

இவர் சவுளூப்பட்டியில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் ஒரு குடோனில் தன்னுடைய பொருட்களை வைத்து இருந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த குடோனில் தீப்பிடித்து பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் மீண்டும் தொழிலை தொடங்குவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பழனி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மைதிலி ஒரு வருடத்திற்குள் ரூ.12 ஆயிரமாக வட்டியுடன் செலுத்த வேண்டும் நிபந்தனையுடன் கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

வாரந்தோறும் அவரால் சரிவர அசலுடன் வட்டியையும் செலுத்த முடியாததால் திணறி வந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் ராஜேஸ்வரியிடம் மைதிலி கூறினார். அவரும் தனது பங்குக்காக ரூ.20 ஆயிரம் மைதிலியிடம் கொடுத்து கடனை அடைக்க கூறினார்.. அந்த பணத்தை எடுத்து கொண்டு பழனியிடம் மைதிலி கொடுத்தபோது, இதுவரை வட்டியுடன் சேர்த்து அசல் தொகை ரூ.70 ஆயிரம் தரவேண்டும் என்று பழனி கூறினார்.

சரிவர வட்டி பணத்தை மட்டும் கட்டி வந்த மைதிலி கடந்த சில மாதங்களாக பணம் எதுவும் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பழனி நேற்று முன்தினம் இரவு மைதிலி வீட்டிற்கு சென்று வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தையும் கேட்டு மிரட்டினார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவரது வீட்டிற்கு பழனி சென்று மைதிலியை ஆபாசமாக திட்டியும், பணத்தை கேட்டு மிரட்டியும் உள்ளார்.

இதனால் மனமுடைந்த மைதிலி அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தார். அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

சிறிது நேரத்தில் மைதிலியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தாயார் ராஜேஸ்வரி வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மைதிலி தூக்குபோட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து ராஜேஸ்வரி பார்த்தபோது மைதிலி தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகள் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து மைதிலியின் அண்ணன் கார்த்திக் தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கந்து வட்டிக்காரரான பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மைதிலியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!