தமிழகத்தில் கனமழை எதிரொலி – 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!


தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பால், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், திருவாரூரில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.-source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!