ஓடி போய் திருமணம் செய்ததால் துடிதுடிக்க அடித்து கொன்றோம் – கைதான தந்தை வாக்குமூலம்..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில், காதல் கலப்பு திருமணம் செய்த நந்தீஸ் – சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வீசப்பட்டது. இந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கர்நாடக மாநிலம் பெலவாடி போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பெண்ணின் பெரியப்பா அஸ்வதப்பா, உறவினர் வெங்கட்ராஜ் (வயது 25), கார் டிரைவர் சாமிநாதன் (30) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ் (ஓசூர் டவுன்), பெரியசாமி (அட்கோ), முருகேசன் (பாகலூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் நான் அவமானம் அடைந்தேன். இதனால் நான் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டேன். கடந்த 10-ந் தேதி ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் வருவதாக அறிந்தேன். அவரை பார்ப்பதற்காக எப்படியும் நந்தீஸ், சுவாதி வருவார்கள் என அறிந்து கொண்டேன். இதனால் அங்கு வந்த அவர்களை எனது உறவினர்கள் மூலமாக நைசாக பேசி அழைத்து சென்றேன். பின்னர் ஆத்திரத்தில் அவர்களை அடித்து கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையுண்ட நந்தீஸ் தான் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும், தன்னிடம் இருந்த செல்போன் மூலமாக ஓசூரில் உள்ள முக்கிய நபர் ஒருவருக்கு தகவல் அனுப்பி உள்ளார். அதில் கிட்நாப், நைஸ் ரோடு என்று குறிப்பிட்டுள்ளார். 11-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் இந்த தகவல் அந்த நபருக்கு சென்றுள்ளது. காலை 6 மணி அளவில் அந்த தகவலை பார்த்த அந்த நபர் நந்தீசின் உறவினர்களுக்கு தெரிவித்தார்.

இதன் பிறகே நந்தீஸ் – சுவாதி தம்பதியை தேடும் பணியை உறவினர்கள் தொடங்கினார்கள். தற்போது இந்த இரட்டை கொலையில் கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு மட்டும் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான பிற ஆவணங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ளன.

அதனால் நந்தீஸ் – சுவாதி தம்பதி கொலை தொடர்பான ஆவணங்களை பெற கர்நாடக போலீசார் ஓசூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை ஓசூர் போலீசாரிடம் ஒப்படைக்கலாமா? என கர்நாடகா போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து கர்நாடக போலீசார் கூறுகையில், தமிழக போலீசார் கேட்கும் பட்சத்தில் இந்த ஆணவ கொலை வழக்கை தமிழ்நாட்டிற்கு மாற்ற கர்நாடக போலீசார் தயாராக இருப்பதாகவும், கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக போலீசார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், தெரிவித்தனர்.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!