வீடு வாசலை இழந்து சிம்புவால் நடுத்தெருவில் நிற்கிறேன்: மைக்கேல் ராயப்பன் அதிர்ச்சி பேட்டி…!!

சிம்பு நடித்து வெளிவந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரித்து வருகிறது. சிம்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் கேட்டு இருக்கிறது.

சிம்புவுக்கு எதிராக புகார் அளித்தது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘நான் நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை, ஈட்டி, மிருதன் ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளேன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தையும் தயாரித்தேன். இந்த படத்தில் நடிக்க சிம்புவை ஒப்பந்தம் செய்தபோது 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.

ஆனால் 27 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார். ஒவ்வொரு நாளும் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டுமே நடித்தார். இதனால் நிறைய காட்சிகளில் அவருக்கு பதிலாக டூப் நடிகரை பயன்படுத்தி படமாக்கினோம். பாதி படம் முடிந்த நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம், தற்போது எடுத்தவரை உள்ள காட்சிகளை வைத்து முதல் பாகமாக வெளியிடுங்கள் என்றார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துபோட அவர் வரவில்லை. படப்பிடிப்புக்கு சரியாக அவர் ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. படத்தின் முதல் பாகம் வெளிவந்து சரியாக ஓடவில்லை. இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் அவர் வரவில்லை. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

விநியோகஸ்தர்களுக்கும் பைனான்சியர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. சிம்புவை நான் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதுபற்றி பேசுவோம் என்றார். அதன்பிறகு அவரை நான் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் போனை எடுப்பது இல்லை.

இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தேன். சிம்புவால் பெரிய நஷ்டமடைந்து நான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!