கஜா புயல் போர்க்கால நடவடிக்கை: தமிழக அரசுக்கு குவியும் பாராட்டுக்கள்

திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. தமிழகம் முழுக்க ஐஏஎஸ் அதிகாரிகள் தாயார் நிலையில் இருக்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படை களமிறங்கியது. அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக களமிறங்கினார்கள். 500-க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. தமிழகம் முழுக்க மருத்துவ குழுக்கள் சென்றது.

இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் மிகப்பெரிய பேரிடரில் இருந்து தப்பித்து இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பலர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரபணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கஜா புயலில் விரைந்து செயல்பட்டதற்காக தமிழக அரசை பாராட்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேற்று காலை சென்னையில் சேப்பாக்கம் கட்டுப்பட்டு அறைக்கு வந்தவர் இன்று அதிகாலைதான் கிளம்பி சென்றார். அதிகாலை சென்றவர், மீண்டும் 2 மணி நேரத்தில் வந்துவிட்டார். அந்த அளவிற்கு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டார்.

அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று இரவு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முடுக்கிவிட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களையும் அமைத்து இருந்தார். அதேபோல் இன்னும் சில அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.

தமிழக அரசின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு மக்கள் பெரிய அளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த புயலை குறித்து பயந்து கொண்டு இருந்தவர்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் திமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!

— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள்; பாதுகாப்புப் பணிகள் தொடர வேண்டும் என கூறி உள்ளார்.
கஜா புயலினால்,பாதிக்கப்பட்ட மக்கள்அனைவருக்கும்,நாம்அனைவரும்..நம்மாலான உதவிகளைச்செய்யவேண்டும்,புயல்எச்சரிக்கை..வந்தகாலத்திலிருந்து முன்னெச்செரிக்கைநடவடிக்கைகள்மேற்கொண்டமுதல்வருக்கும்..@CMOTamilNadu களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகள்.பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும்

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 16, 2018
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு என் பாராட்டுக்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.

கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி , ஆட்சியர்கள் பணி போற்றத்தக்கது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

— Kamal Haasan (@ikamalhaasan) November 16, 2018
கஜா புயலுக்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.