இரவு முழுவதும் நடு வீதியில் அழுதுகொண்டிருந்த சிறுமி… எதெற்கெனத் தெரியுமா?


பாதுகாப்பின்றி வீட்டில் இருந்து வெளியேறி குளியாப்பிட்டிய ஹெம்பவ ஸ்ரீ சுதர்மாராமய விகாரைக்கு அருகில் அழுது கொண்டிருந்த 13 வயதான சிறுமியை அருகில் பயணித்த கிராமவாசிகள் அவதானித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

சிறுமி இரவு முழுவதும் வீதியில் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் சிறுமியை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.

பசி காரணமாக தேங்காய் ஒன்றை உடைத்து சாப்பிட்டதாக கூறி, பாட்டி தன்னை தாக்கி அச்சுறுத்தியதாக சிறுமி கூறியுள்ளார். இதன் காரணமாக நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

சிறுமி குளியாப்பிட்டிய நகரில் 8 ஆம் வகுப்பில் கற்று வருவதாக தெரியவருகிறது. சிறுமியின் தாய் கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் தந்தை கண்டியில் இருப்பதாக கூறியுள்ள சிறுமி, தனது பாட்டியுடன் ஹெம்பவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியுடன் கிராமத்தவர் கதைத்து கொண்டிருந்த போது அங்கு வந்த வயதான பெண்ணொருவர் சிறுமி தனது பேத்தி எனக் கூறி அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். எனினும் குறித்த சிறுமி அந்த பெண்ணை தனக்கு தெரியாது எனக் கூறியதன் காரணமாக பொலிஸார் வரும் வரையில் பிரதேசவாசிகள் சிறுமியுடன் இருந்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்னவின் ஆலோசனைக்கு அமைய இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் வந்து சிறுமியையும் வயதான பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளரா என்பதை கண்டறிய பொலிஸார் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். தாக்கியதாக கூறப்படும் பாட்டி மற்றும் சிறுமியை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!