நரேந்திர மோடி நிச்சயம் என்னை புரிந்து கொள்வார் – ராஜபக்சே பரபரப்பு பேட்டி..!


என்னுடைய நிலைப்பாட்டை இந்தியா புரிந்து கொள்ளும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி திடீரென, பிரதமராக நியமித்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை இருந்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார் அதிபர்.

வரும் ஜனவரி 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார் அதிபர். இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அதிபரால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானவை மற்றும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று கூறி ரணில் விக்ரமசிங்கே கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

இந்த நிகழ்வுகளை உற்று நோக்கி வரும் உலக நாடுகள், இலங்கை தனது அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா சார்பில் இதுவரை இலங்கை விவகாரம் குறித்து மேல்மட்டத்திலிருந்து எந்த ஒரு அழுத்தமும் தரப்படவில்லை.


இந்த நிலையில் ‘இந்தியா டுடே’ டிவி சேனலுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அளித்துள்ள சிறப்பு பேட்டியில், இலங்கை, ஒரு ஜனநாயக நாடு. இதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் மக்களிடம்தான் செல்ல உள்ளோம். அவர்களது தீர்ப்பை எதிர்பார்த்து தேர்தலில் நிற்க உள்ளோம்.

இது குறித்து உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் சொல்வோம். அவர்கள் எங்களது நிலையை புரிந்து கொள்வார்கள். இது குறித்த முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சர்வதேச நாடுகளுடன் இது தொடர்பாக பேசியுள்ளார். நானும் கூட விரைவில் சர்வதேச அளவில் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.

நான் சுமார் ஒன்றரை மாதங்கள் முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். எனது எண்ணங்களை அவர் புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். தேர்தல் நடைபெற உள்ளது குறித்த அறிவிப்பு ஏற்கனவே அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதை யாராலும் தடுக்க முடியாது. 19ஆவது சட்டத் திருத்தத்தின்படி தவறு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. நீங்கள் ஒட்டுமொத்தமாக பிற சட்டப் பிரிவுகளையும் பார்க்க வேண்டும்.

இலங்கை அரசியல் சாசனத்தின்படி , அதிபரால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும். எனவே இது ஜனநாயகத்திற்கு எதிரானது கிடையாது. இவ்வாறு ராஜபக்சே தெரிவித்துள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!