நடிகர் விஜய்க்கு ஜெயலலிதாவுடன் அப்படி என்ன தான் பிரச்சனை..?


கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நடிகர் விஜயும்,அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் அ.தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். மேலும் 50 தொகுதிகளில் விஜய் ரசிகர்களின் களப்பணி தேவை என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எஸ்.ஏ.சிக்கு ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க கொடுத்த 50 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் தீயாக வேலை பார்த்தனர். இந்த 50 தொகுதிகளில் சுமார் 43 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவு வெளியாகி ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு விஜயும், சந்திரசேகரும் வெளியே வந்தனர்

செய்தியாளர்களை சந்தித்த விஜய், ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு ஒரு அணிலாக தான் உதவியது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி அளித்தார். அதனை தொடர்ந்து பட விழா ஒன்றில் நடிகர் வஜய் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு தம்பி விஜய் அமைதியாக அமர்ந்திருப்பதாக கொளுத்தி போட்டுவிட்டு சென்றார்.

இதன் பிறகு தான் விஜய் தரப்புக்கும் – ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது வெற்றிக்கு விஜய் உதவியதாக கூறியதை ஜெயலலிதாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் தயாரிப்பாபளர் சங்க தலைவர் பதவியில் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகரை நீக்கும் உள்ளடி வேலையில் அ.தி.மு.க இறங்கியது. அதுமட்டும் அல்லாமல் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படத்தை ஜெயா டி.வி அடிமாட்டு விலைக்கு கேட்டது.


வேறு வழியே இல்லாமல் வேலாயுதம் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை விஜய் தரப்புக்கு உருவானது. இதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தையும் ஜெயா டி.வி வாங்க விரும்பியது. ஆனால் நண்பன் திரைப்படம் விஜய் டிவி வசம் ஆனது. இதனால் தான் விஜய் நடிப்பில் துப்பாக்கி திரைப்படம் வெளியாக இருந்த போது இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இஸ்லாமிய அமைப்புகளின் பின்னணியில் அ.தி.மு.க மேலிடம் இருப்பது அப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்தது. இருந்தாலும் கூட இந்த முறை விஜய்தரப்பு இறங்கி வரவில்லை. துப்பாக்கி படத்தையும் விஜய் டி.விக்கே விற்பனை செய்தது. இந்த நிலையில் தான் விஜய் தலைவா என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் அரசியல் பேசுவதும், டைம் டூ லீட் என்கிற சப் ஹெட்டிங்குடன் படம் வெளியாக இருப்பதும் அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

படத்தை திரையிட திரையரங்குகள் மறுத்துவிட்டன. காரணம் அ.தி.மு.கவின் மறைமுக மிரட்டல். இதனால் பிரச்சனையை சுமூகமாக முடிக்க நடிகர் விஜய் ஜெயலலிதா அப்போது தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டுக்கு தனது தந்தையுடன் புறப்பட்டுச் சென்றார்.


ஆனால் விஜயை கேட் முன்பு நிற்க வைத்து திருப்பி அனுப்பினார் ஜெயலலிதா. இதன் பிறகு சென்னை திரும்பி ஜெயலலிதாவுக்கு உருக்கமான ஒரு வீடியோ வெளியிட்டு பிரச்சனையை முடித்தார் விஜய்.

அதன் பிறகு விஜயும் ஜெயலலிதாவுடன் எந்த வம்புக்கும் செல்வதில்லை. ஜெயலலிதாவும் விஜயை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா காலமாகிவிட்ட நிலையில், அ.தி.மு.கவும் தற்போது பலவீனமாக உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட விஜய் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை கடுமையாக சாடி சர்காரில் வசனம் பேசியுள்ளார்.

மேலும் வில்லிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கேமாளவல்லி என்று பெயர் சூட்டி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஜெயலிதா உயிரோடு இருந்த போது அவரிடம் கெஞ்சி வெளியிட்ட வீடியோவில் கூட விஜய் கைகளை கட்டிக் கொண்டு தான் நிற்பார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு வீரவசனம் பேசுவது கோழைத்தனம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.-source : asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!