1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதரை காப்பாற்ற ஒருத்தன் கூட இல்லயா..?


பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கி வரும் உதவியை செய்து வருகிறார் பர்கத் சிங் (41). 13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்து வருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார். மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.

இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த பர்கத் சிங் கடந்த 23-ம் தேதி, உறவினர்களின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு மனைவியுடன் திரும்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தால் கை, கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் மேல் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், சிகிச்சைக்குரிய போதுமான பணம் அவரிடம் இல்லை. பணத்துக்காகக் கஷ்டப்படும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை. இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது என கூறியுள்ளார். அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.-source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!