முகத்தை பட்டுப்போல் மென்மையாக்க பாலை இப்படியும் யூஸ் பண்ணலாம்..!


பால் ஒரு நிறையுணவு என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பருகுவது சிறந்தது. அதே போல் இந்தப் பால் முக அழகை பேணுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்பதனை நீங்கள் அறிவீர்களா?

ஆம், இந்தப் பாலை முகத்தின் அழகை மெருகூட்டும் பொருட்டும் சருமத்தை பாதுகாக்கும் பொருட்டும் உபயோகிக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. முகத்தை வெண்மையாக்குவதற்கும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றுவதற்கும் இந்தப் பால் உபயோகிக்கப்படுகின்றது.

அது எப்படி என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. கிளென்சராக பயன்படுத்த முடியும்
பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் மூன்று தேக்கரண்டி பாலை இடவும். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து நன்கு கலவை போல் ஆக்கிக் கொள்ளவும். பின்னர் பஞ்சு சிறுதுண்டு ஒன்றை எடுத்து அதனை குறித்த கலவையில் நனைத்து அதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் நீங்கி விடும். இவ்வாறு தினமும் செய்வது சிறந்தது.

02. வறண்ட சருமத்திற்கு
சிறுதுண்டு வாழிப் பழத்தை எடுத்து அதனை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு தேக்கரண்டி பாலை கலந்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் வழமை போல் முகத்தை கழுவி விட வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள வறண்ட தன்மை இல்லாது போகும்.


03. கரும் புள்ளிகளை அகற்ற
இரண்டு மேசைக்கரண்டி அளவு சீவிய ஒரேஞ்ச் தோலை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தேவையான அளவு பாலை சேர்த்து அதனை பசை போல் ஆக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசிக் கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் இதனைக் கழுவி விட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்வது உத்தமம்.

04. வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெண்மையாக்க
வெயில் மூலம் கருமையடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமாயின் பாலை முகத்தில் பூசி வர வேண்டும். அதே நேரம் பாலுடன் வேறு பொருட்களை கலந்தும் கருமையைப் போக்கலாம்

– நான்கில் ஒரு கோப்பை பாலை எடுத்து அதில் அரைவாசி தக்காளியை சேர்த்து மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்தக் கலவையை கருமை ஏற்பட்டுள்ள பகுதியில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்வது உத்தமம்.

– இரண்டு மேசைக்கரண்டி தேனுடன் இரண்டு மேசைக் கரண்டி பாலை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் கலவையை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்களுக்கு முகத்தில் வைத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்வது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!