300 ரூபாய்க்காக விவசாயி கொடூரமாக அடித்து கொலை – கதறியழுத குடும்பத்தினர்..!


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45), விவசாயி.

இவருடைய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த மேகவர்ணன் (45) என்பவர் டிராக்டர் மூலம் உழுதார். இதற்கு ஆறுமுகம் மேகவர்ணனுக்கு ரூ.300 கூலி கொடுக்க வேண்டி இருந்தது. இந்த பணத்தை மேகவர்ணன் அடிக்கடி ஆறுமுகத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை மேகவர்ணன் தனது மருமகன் ராமதாசுடன் ஆறுமுகம் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அவரிடம் ரூ.300 பணத்தை கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மேகவர்ணன், அவரது மருமகன் ராமதாஸ் ஆகியோர் அங்கு கிடந்த இரும்புகம்பி மற்றும் தடியால் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்ததும் மேகவர்ணனும், ராமதாசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகி விட்ட மேகவர்ணன், ராமதாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்துக்கு காமாட்சி என்ற மனைவியும், காந்தி என்ற மகனும், சுமதி, வசந்தி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.-source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!