மகிந்தவுடன் சம்பந்தன் திடீர் சந்திப்பு – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு?


இலங்கையில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற ரணில் விக்ரமசிங்கேயும், ராஜ பக்சேவும் முயன்று வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ராஜ பக்சேவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அதிபர் சிறிசேனா பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்தார். அத்துடன் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். உடனே அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்த ரணில், தான் பிரதமர் பதவியில் தொடர்வதாகவும் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக 27-ம் தேதி சிறிசேனா அறிவித்தார். ராஜபக்ச குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் முடக்கப் பட்டுள்ளதாக ரணில் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 இடங்களில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி, சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சி கூட்டணிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ராஜ பக்சேவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ராஜ பக்சேவுக்கு, சம்பந்தன் இரண்டு நிபந்தனைகளை முன் வைத்தாக கூறப்படுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் இணைக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரு நிபந்தனைகளை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தன் கூறுகையில் “கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்தால் மட்டுமே ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிப்போம்’’ எனக் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பெரிஸூம் உடன் இருந்தார்.-Source: thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!